Published : 19 Jan 2021 03:21 PM
Last Updated : 19 Jan 2021 03:21 PM

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனைக் கிண்டல் செய்த சித்தார்த்

இந்திய அணியினரைப் பாராட்டியதுடன், ஆஸ்திரேலிய அணியினரைக் கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார் சித்தார்த்.

ரிஷப் பந்த், ஷுப்மான் கில் ஆகியோரின் ஆகச்சிறந்த பேட்டிங்கால் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி பலரும் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்கள் கடும் எதிர்வினைகளைச் சந்தித்தன. அந்தச் செயல்களைத் தற்போது குறிப்பிட்டு, ஆஸ்திரேலிய அணியினரைக் கடுமையாகக் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்திய அணியின் அற்புதமான வெற்றி குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"என்ன ஒரு மறக்க முடியாத ஆட்டம். 36 ரன்களுக்கு மொத்தமாக ஆட்டமிழந்ததிலிருந்து, 38 வருடங்களில் முதல் முறை வெற்றி என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். பந்த், புஜாரா, சுந்தர், சிராஜ், ஷர்துல் மற்றும் கேப்டன் ரஹானே என அனைவரும் சாம்பியன்கள்.

டிம் பெய்னுக்கு விசேஷ அர்ப்பணிப்பு. நீங்கள் எங்கள் அணிக்கு எதிராக என்ன செய்தாலும் அதைக் கண்ணியத்துடன் உங்களுக்குப் பிரதிபலிப்போம். இன்னும் மேம்பட்டு இருங்கள் நண்பா. உங்களின் அற்புதமான கீப்பிங் திறமைக்கு நன்றி. பேட் கம்மின்ஸுக்கு பெரிய வணக்கங்கள். அவர் அயராத தரமும், திறமையும் கொண்டவர். நீங்கள் ஆடுவதைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது.

ஷுப்மான் கில், சிராஜ், ஷர்துல் தாக்கூர், சுந்தர், நட்டு, பந்து, கிரிக்கெட் உலகின் எதிர்கால ராஜாக்கள் பலர் உருவாகி வருகிறார்கள். எந்த நிலையிலும் இந்திய கிரிக்கெட் அணி இளமையுடன், உயிர்ப்புடன், நல்ல நடத்தையுடன், போராடும் குணத்துடன் இருக்கிறது. என்ன ஒரு நாள், என்ன ஒரு உணர்வு. என்றும் மறக்காதீர்கள். ஆனால் என்றும் திரும்பிப் பார்க்காதீர்கள்.

தற்காலிக கேப்டனாக இருந்த ரஹானேவுக்குப் பெரிய பாராட்டு. நீங்கள் தரத்துடன், அமைதியாக வழிநடத்தினீர்கள். வீரர்கள் அறையில் பல விஷயங்களை நீங்கள் சரியாகச் செய்திருக்க வேண்டும். உங்களுக்காக அணி வீரர்கள் அத்தனை முயற்சிகளையும் செய்திருக்கின்றனர். வாழ்த்துகள் ரஹானே.

வர்ணனையாளர்கள் அறையில் மஞ்சரேகரை விட்டுவைக்க வரலாற்றில் இதை விட மோசமான காலகட்டம் இருக்க முடியுமா?".

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x