Published : 12 Jan 2021 04:29 PM
Last Updated : 12 Jan 2021 04:29 PM

’துக்ளக் தர்பார்’ படக்குழுவுக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை

'துக்ளக் தர்பார்' படக்குழுவினருக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஜனவரி 11) 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த டீஸர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது. ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளமையைத் தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி.

நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கும் எதிரானதுபோலக் கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவதுபோல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்குகிறது.

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது, "தெரியாமல் நடந்துவிட்டது. அந்த மாதிரி காட்சிகளை சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்".

இவ்வாறு நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x