Published : 11 Jan 2021 12:17 PM
Last Updated : 11 Jan 2021 12:17 PM

'விக்ரம்' டீஸரில் 'விஸ்வரூபம்' துப்பாக்கி: பின்னணி என்ன?- லோகேஷ் கனகராஜ் பகிர்வு

'விக்ரம்' படத்துக்கான டீஸர் படப்பிடிப்பில் 'விஸ்வரூபம்' படத்தில் பயன்படுத்திய துப்பாக்கியைப் பயன்படுத்தியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

'மாநகரம்', 'கைதி' படங்களைத் தொடர்ந்து 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

பொங்கல் தினத்தன்று 'மாஸ்டர்' வெளியாகிறது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று, நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியானது.

இதை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனே தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தின் டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டு அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த டீஸர் படப்பிடிப்பு அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

"டீஸருக்கான படப்பிடிப்பு ஒரு நாள் முழுவதும் நடந்தது. அந்த முழு படப்பிடிப்பில் கமல் என்னிடம் கேட்ட விஷயங்கள் மிகக் குறைவு. ‘ஆரம்பிக்கலாமா என்பதற்கு பதில், ‘ஆரம்பிக்கலாங்களா என்று சொல்லவா’ எனக் கேட்டார். நானும் ‘சரி, அதையே நக்கலாகச் சொல்லுங்கள் சார்’ என்றேன். மற்றபடி படப்பிடிப்பு எப்படித் திட்டமிடப்பட்டுள்ளது, என்ன மாதிரியான கருவிகளைப் பயன்படுத்தப் போகிறோம் என்பது பற்றித்தான் பேசுவோம்.

அந்த டீஸரில் துப்பாக்கிகளைக் காட்டியிருப்போம். துப்பாக்கிகளைக் கலை இயக்குநரிடம் சொல்லிக்கொண்டு வந்துவிட்டோம். எனக்குத் துப்பாக்கிகளைப் பற்றிய ஆர்வம் உண்டு. எனவே, எனக்குத் தேவையான துப்பாக்கிகளைத் தேர்ந்தெடுத்து அடுக்கியிருந்தேன். கமலிடம் எதை எடுத்து வைக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘எல்லாமே நவீன ரக துப்பாக்கிகளா’ என்று கமல் சார் கேட்டார். ‘ஆமாம் சார். ஆனால், எம் எம் 6 ரகம் மட்டும் கிடைக்கவில்லை’ என்றேன்.

‘எம் எம் 6 வேண்டுமா’ என்று கேட்டார். ‘இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றேன். உடனே ஒருவரைக் கூப்பிட்டு, ‘விஸ்வரூபத்துகாக வாங்கி வைத்திருந்த எம் எம் 6 துப்பாக்கிகளைக் கொண்டு வாருங்கள்’ என்றார். ‘ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா’ என்றார். ‘நான் பரவாயில்லை காத்திருக்கிறேன்’ என்றேன்.

ஒரு மணி நேரம் கழித்து அழைத்தார்கள். வெளியே சென்று பார்த்தால் 30-35 எம் எம் 6 ரக துப்பாக்கிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். ‘எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கமல் சார் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். குழந்தையைக் கடையில் விட்டு தேர்ந்தெடுக்கச் சொன்னதுபோல இருந்தது எனக்கு.

அதில் எல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு இரண்டு துப்பாக்கிகளைத் தேர்ந்தெடுத்தேன். இப்படி எதுவாக இருந்தாலும் அவரிடம் பேசலாம், உரையாடலாம். அதற்குத் தேவையானதை அவர் செய்வார்" என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x