Published : 10 Jan 2021 01:30 PM
Last Updated : 10 Jan 2021 01:30 PM

மருத்துவ உதவி கோரும் 'என் உயிர்த் தோழன்' பாபு: நேரில் சந்தித்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா

சென்னை

'என் உயிர்த் தோழன்' பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்து, கண்ணீர் சிந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவரும் பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் 'என் உயிர்த் தோழன்' பாபு என்ற பெயர் மிகவும் பரிச்சயம்.

அதனைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பெரும்புள்ளி', கோபி பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'தாயம்மா' படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'மனசார வாழ்த்துங்களேன்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது விபத்தில் சிக்கினார். டூப் போடாமல் நடித்ததால் விபத்தில் பாபுவின் முதுகுத்தண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கையானார்.

பின்பு சில நாட்களில் உடல்நிலை கொஞ்சம் சரியானவுடன், ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'அனந்தகிருஷ்ணா' படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால், அந்தப் படம் வெளியாகவே இல்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையிலேயே காலத்தைத் தள்ள வேண்டிய சூழலுக்கு ஆளானார்.

இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகமானது. இதனைத் தொடர்ந்து திரையுலக நண்பர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் பாபு. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, பாபுவை நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த வீடியோவில் பாரதிராஜாவிடம் பாபு பேசுவதும், அதனைத் தொடர்ந்து பாரதிராஜா கண்ணீர் சிந்துவதும் பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.

பாபுவின் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்கள் சிலர் உதவி செய்துள்ளனர். மேலும், உதவிகள் தேவைப்படுவதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்து மறைந்த ராஜாராமின் உறவினர்தான் பாபு என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x