Published : 07 Jan 2021 09:16 PM
Last Updated : 07 Jan 2021 09:16 PM

ஆதிரா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்? - சஞ்சய் தத் விளக்கம்

பெங்களூரு

ஆதிரா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே.ஜி.எஃப் 2'. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 2-ம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை இணைத்துள்ளார் பிரசாந்த் நீல். தற்போது யாஷுக்கு வில்லனாக நடித்திருப்பது குறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது:

"ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் செய்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் இது. கதைப்படி ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். இந்த கதாபாத்திரமாக மாற உடல்தகுதியை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் சுமார் 1.5 மணி நேரம் எனக்கு மேக் அப் செய்ய வேண்டியிருந்தது. அதுதவிர மனரீதியாக நிறையப் பயிற்சிகளைச் செய்தாலே அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்குள் என்னால் நுழைய முடிந்தது.

நான் வில்லனாக நடித்திருக்கிறேன். வில்லன் கதாபாத்திரங்களைச் செய்வதில் எனக்கு அலாதி பிரியமுண்டு. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு ஆற்றல் கொண்டது. அது கேட்கும் ஆற்றலை நடிகனாக நாம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். 'கே.ஜி.எஃப் 1' படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. அதேபோல் இந்தப் படத்திலும் பஞ்சமில்லாமல் அதிரடி காட்சிகள் இருக்கும். குறிப்பாக நானும் யாஷும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

பிரசாந்த் நீல் மிகச் சிறந்த பண்பாளர். அவருடன் பணியாற்றியது மிகவும் சுகமான பயணம். நான் முதன்முறை அவருடன் இணைந்திருந்தாலும், எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. நான் இதற்கு முன்னதாகவும் 'கே.ஜி.எஃப்' உலகில் இருந்தது போலவே உணர்ந்தேன். நாங்கள் நிறையப் பேசினோம். அவரது வேலை நேர்த்தியும், இயக்குநர் பணியும் எனக்கு நிறையப் பாடம் கற்றுக் கொடுத்தது.

'கே.ஜி.எஃப் 2'-வில் பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். எனக்கான கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாக இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். ஒரு கதை தான் கதாபாத்திரத்தின் உயிர். ஆதிரா கதாபாத்திரத்தின் முரட்டுத்தனமும் கொடூரமும் என்னை உடனே இதை ஏற்றுக் கொள்ளவைத்தது"

இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x