Published : 06 Jan 2021 05:36 PM
Last Updated : 06 Jan 2021 05:36 PM

படக்குழுவினருக்கு இலவசமாக 100 ஸ்மார்ட்போன்கள்: சோனு சூட் உதவி

'ஆச்சார்யா' படக்குழுவில் 100 ஸ்மார்ட்போன்களை இலவசமாகத் தந்துள்ளார் நடிகர் சோனு சூட்.

கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார்.

அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் நல உதவிகளைப் பாராட்டி அவரைக் கவுரவிக்கும் விதமாக தெலங்கானாவில் இருக்கும் துப்ப தண்டா என்கிற கிராமத்தில் சோனு சூட்டுக்குக் கோயில் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சோனு சூட். இந்தப் படப்பிடிப்பில் பணியாற்றும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பலருக்கு, அவர்களின் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கவனிக்க, ஸ்மார்ட்போன் வாங்க வசதியின்றித் தவித்தது சோனு சூட்டுக்குத் தெரிய வந்துள்ளது.

எனவே, படக்குழுவில் இருந்த பணியாளர்களுக்கு இலவசமாக கிட்டத்தட்ட 100 மொபைல் போன்களை வாங்கித் தந்திருக்கிறார். சோனு சூட்டின் இந்தச் செயலால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x