Published : 31 Dec 2020 06:01 PM
Last Updated : 31 Dec 2020 06:01 PM

தொடரும் 'வலிமை' புகைப்படங்கள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

'வலிமை' படத்தின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதால், படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 90% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் சில காட்சிகளும், பாடல்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியதுள்ளது. அதையும் விரைவில் முடித்து, அஜித் பிறந்த நாளுக்குப் படத்தை வெளியிட மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு.

'வலிமை' படத்தின் பூஜை அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டபோது, அந்த விபத்துக்கான காட்சியில் பைக் ஓட்டும் புகைப்படம் ஆகியவை மட்டுமே படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இதைத் தாண்டி வெளியான புகைப்படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக வெளியானவைதான்.

தற்போது படத்தில் அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், சண்டைக்காட்சியின்போது காருக்கு அருகில் அஜித் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் மூலம், அர்ஜுன் குமார் என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்தப் புகைப்படங்களின் வெளியீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இன்று (டிசம்பர் 31) இரவு போனி கபூர் தயாரித்து வரும் 'வக்கீல் சாப்' படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக போனி கபூர் ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதில்களாக 'வலிமை' அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டமாக 'வலிமை' அப்டேட் இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு, தற்போது வரை ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத்தான் அப்டேட் கொடுப்பது என்ற தீர்மானத்தில் படக்குழுவினர் இருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x