Published : 31 Dec 2020 04:03 PM
Last Updated : 31 Dec 2020 04:03 PM

'ஈஸ்வரன்' வெளியீட்டில் சிக்கல்? - தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை

சென்னை

'ஈஸ்வரன்' வெளியீட்டில் நிலவிவரும் சிக்கலுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்காகத் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 'ஈஸ்வரன்' பட வெளியீட்டை தடுக்க பலரும் 'AAA' படத்தின் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளனர். அந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. மேலும், அதனைத் தொடர்ந்து சிம்பு - மைக்கேல் ராயப்பன் இருவருக்கும் மோதல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

தற்போது 'ஈஸ்வரன்' வெளியீட்டைத் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்பந்தமாகப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ படத் தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திட மாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுத்திருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்குத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறையப் பிரச்சினைகள் இருந்தது. அதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் சிம்பு அவரது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்"

இவ்வாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சங்கத்தைத் தொடங்கியவர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர். மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக நீடிப்பதற்காக, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x