Published : 28 Dec 2020 06:48 PM
Last Updated : 28 Dec 2020 06:48 PM

ஜேஎன்யு போராட்டம், தேச விரோத கருத்து; சர்ச்சையில் சிக்குகிறதா பார்வதியின் 'வர்த்தமானம்'? 

பார்வதி திருவோத்து - ரோஷன் ஆண்ட்ரூஸ் நடித்திருக்கும் 'வர்த்தமானம்' திரைப்படத்துக்கு கேரளத் தணிக்கை வாரியம் தணிக்கை வழங்க மறுத்துள்ளது.

சித்தார்த் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வர்த்தமானம்'. இதில் பார்வதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாசிரியர் ஆர்யதன் ஷௌகத், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்யதன் முகமதுவின் மகன். மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்திருக்கிறார். உள்ளூர் அரசியலிலும் தீவிரமாக இயங்கிவருகிறார்.

'வர்த்தமானம்' படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் படம் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் என்றும், தேச விரோதக் கருத்துகள் இந்தப் படத்தில் இருப்பதாகவும் தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்களில் ஒருவரான சந்தீப் குமார், ''ஜேஎன்யு போராட்டத்தில் தலித்துகளும், இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டதாக இந்தப் படம் சொல்கிறது. மேலும், இந்தப் படத்தின் கதாசிரியர், தயாரிப்பாளர் ஆர்யதன் ஷௌகத். அதனால் இந்தப் படத்தை எதிர்க்கிறேன். படத்தின் கரு தேசத்துக்கு எதிரானது'' என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் இவர் பகிர்ந்திருந்த இந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும் இதன் ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்தப் படம் மறு தணிக்கைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சந்தீப் குமாரின் கருத்துக்குப் பதிலளித்திருக்கும் ஷௌகத், "டெல்லி கல்லூரி வளாகத்தில் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது அது எப்படி தேச விரோதமாகும்? நாம் இன்னும் ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச குடியரசில்தான் வாழ்கிறோம்.

படத்தைத் திரையிடுவதற்கு முன் கதாசிரியரின் இனத்தைப் பற்றி ஆராய வேண்டுமா? இந்தக் கலைத்துறையில் இருக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலையை ஏற்கமுடியாது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x