

’மிஷன் மஜ்னு’ என்கிற த்ரில்லர் திரைப்படம் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
சித்தார்த் மல்ஹோத்ரா ர நாயகனாக நடிக்கவுள்ள இந்தத் திரைப்படம் பாகிஸ்தான் நாட்டில் இந்தியா நடத்திய ரகசிய உளவு வேலை பற்றிய கதையாக உருவாகிறது. 1970களில் அமைக்கப்பட்டுள்ள இந்த களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர் எஸ் வி பி மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. "எதிரிகளின் எல்லையில் நமது உளவுத்துறையால் நடத்தப்பட்ட ஆபத்தான ஒரு செயல்திட்டம். ’மிஷன் மஜ்னு’வின் முதல் பார்வையை வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டு படத்தின் போஸ்டரை தயாரிப்பு தரப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பர்வேஸ் ஷேக், அஸீம் அரோரா, சுமீத் பதேஜா திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பாலிவுட்டில் அவருக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருது வென்ற விளம்பரப் பட இயக்குநர் ஷாந்தனு பாக்ஜி இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பான ரா (RAW) உளவாளியாக நடிக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா, "மிஷன் மஜ்னு நாட்டுப்பற்றைப் பற்றிய கதை. நமது நாட்டின் குடிமக்களை பாதுகாக்கும் ரா உளவாளிகளின் கடின உழைப்பைக் கொண்டாடும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நமது துணிச்சலான அதிகாரிகளின் கதையைச் சொல்வது ஒரு கவுரவம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவை நிரந்தரமாக மாற்றிய குறிப்பிட்ட செயல்திட்டத்தைப் பற்றிய படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இதை அனைவருடனும் பகிர்வதை எதிர்நோக்கியிருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.
2021 பிப்ரவரி முதல் ’மிஷன் மஜ்னு’வின் படப்பிடிப்புத் தொடங்குகிறது.