Published : 22 Dec 2020 05:46 PM
Last Updated : 22 Dec 2020 05:46 PM

காதல் மன்னன் நூற்றாண்டு: ஜெமினி கணேசனின் மகன் சதீஷ் சிறப்புப் பேட்டி

உடன்பிறந்த அக்கா விஜயசாமுண்டீஸ்வரி, அப்பா ஜெமினி கணேசன், மனைவி பிரசன்னா ஆகியோருடன் சதீஷ்.

தமிழ் சினிமாவின் 'முதல் பட்டதாரி நடிகர்' என்ற பெருமை ஜெமினி கணேசனுக்கு மட்டுமே உண்டு. அவரை காதல் மன்னனாகக் கொண்டாடும் அதே நேரம், பாசமும் பொறுப்பும் மிகுந்த தந்தையாக அவரது முகம் வெளியுலகம் அறியாத ஒன்று. அதை முதல் முறையாக வெளிப்படுத்துகிறார், ஜெமினி கணேசன் - சாவித்திரி தம்பதியின் ஒரே மகன் சதீஷ் குமார். பொறியியல் பட்டதாரியான இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசித்தபடி மென்பொருள் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக முத்திரை பதித்துவருகிறார்.

தனது தந்தையின் நூற்றாண்டையொட்டி 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு மனம் திறந்து அளித்த பிரத்யேகப் பேட்டி இது:

தமிழ் சினிமாவின் மூன்று ஜாம்பவான் நடிகர்களில் ஒருவர் உங்களுடைய அப்பா. மற்ற இருவரான, எம்.ஜி.ஆரும் சிவாஜியும் உங்கள் அப்பாவின் மீது எந்த அளவுக்கு நட்புடன் இருந்தார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

அதுபற்றி அப்பா என்னிடம் நிறைய பேசியிருக்கிறார். இரண்டு பேருடைய நடிப்புப் பாணிகளைப் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். 'அந்த இருவருடைய நடிப்பிலிருந்தும் நான் தனித்து நிற்க, பெரிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை. எனக்கு நாடக நடிப்பின் தாக்கமும் கிடையாது. நிஜ வாழ்க்கையில் எப்படி எல்லோரிடமும் பழகுகிறேனோ, அந்த இயல்புத் தன்மையை என் நடிப்பிலும் கொண்டுவந்தேன். அதற்கு, ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாகி வந்த 'மெத்தட் ஆக்டிங்' முறையின் மீது எனக்கு ஏற்பட்ட கவனமும், இலக்கியங்களில் கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் படிக்கும்போதே கற்பனை செய்துகொண்டு வாசித்ததும் கூட என் நடிப்பின் இயல்புத் தன்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

அம்மா, அப்பாவுடன் குழந்தையாக சதீஷ்.

எப்படியோ எனது நடிப்பு 'இயற்கையாக' இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துகொண்டு நடித்ததால்தான் என்னால் தனித்து நிற்க முடிந்தது. ஆணழகன் என்று சொல்வதையெல்லாம் நான் ஏற்கமாட்டேன். நடிக்கத் தெரியாவிட்டால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள். ஆனால், நடிகன் என்பவன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்' என்று என்னிடம் கூறியிருக்கிறார்.

அதேபோல், நான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனாக இருப்பதில் அவருக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை. சிவாஜி மாமாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் அப்பாவை தனது சொந்த மாப்பிள்ளையாகவே கொண்டாடியவர். அவர்கள் இருவருக்குமான நெருக்கம், உறவு பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவர்களது உறவு என்பது அப்பா 'காஸ்ட்டிங் அசிஸ்டென்ட்டாக' ஜெமினியில் வேலைபார்த்த நாட்களிலிருந்து தொடங்கியது.

சிவாஜி மாமா, சினிமாவில் நடிக்க வாய்ப்புதேடி ஜெமினிக்கு வந்தபோது தனது கேமராவால் சிவாஜி மாமாவைப் படமெடுத்தது மட்டுமல்ல, 'வி.சி.கணேசன் என்கிற இந்த நாடக நடிகரின் கண்களும் முக லட்சணமும் நடிப்பில் உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற அங்க லட்சணத்துடன் இருக்கின்றன. சிறந்த நடிகராக வரும் தகுதி இவருக்கு உண்டு' என மேக்-அப் டெஸ்ட் நோட்டில் அப்பா எழுதி வைத்திருந்தார் என்று சிவாஜி மாமாவே அப்பா இல்லாத மேடை ஒன்றில் பேசி அப்பாவை கவுரவம் செய்திருக்கிறார்.

ஒரேயொரு சம்பவத்தை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன். பெங்களூருவில் ஹாஸ்டலில் தங்கி இன்ஜினீயரிங் படிக்கச் சென்றேன். அப்போது, என்னை வழியனுப்ப அப்பா விமான நிலையம் வந்தார். என்னைப் பிரிந்து இருக்க அவருக்கு கொஞ்சமும் மனமில்லை. முகம் வாடிப்போய்விட்டது. அப்போது படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்த சிவாஜி மாமா எங்கள் இருவரையும் அங்கே பார்த்துவிட்டார். உடனே எங்களை நோக்கி வேகமாக வந்தார். அப்பா என்னிடம் 'இதுவொரு நல்ல முகூர்த்தம். அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்' என்றார். அவ்வாறே செய்தேன். அப்போது 'நன்றாகப் படித்து அப்பாவைப் பெருமைப்படுத்தனும்' என்று என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆசீர்வதித்தார் சிவாஜி மாமா.

ஏற்கும் வேடம் எதுவென்றாலும் ஜெமினி கணேசனின் நடிப்புத் திறமை, எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்கள் உட்பட அனைவராலும் நேசிக்கப்பட்டது. ஆனால், நடிப்புக்கான தேசிய விருது தனக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்ததா?

அப்பாவைப் போல் ஒரு தன்னம்பிக்கையான மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. விருதுகளைப் பற்றி அவர் பேசியதோ, அதற்காக கவலைப்பட்டதோ கிடையாது. மக்கள் அவருக்குக் கொடுத்த 'காதல் மன்னன்' என்ற விருதை அவருக்குப் பின் யாருக்கும் கொடுக்கவில்லையே..! அதே நேரம், மத்திய அரசு அவருக்கும் அம்மாவுக்கும் அஞ்சல் தலை வெளியிட்டதை மறக்க முடியாது.

அவரது பல கதாபாத்திரங்களும் அவற்றுக்கு அவர் தந்த குணச்சித்திர நடிப்பும் விருதுக்குரிய தகுதி கொண்டவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அப்படி அப்பாவின் நடிப்பில் நான் வியந்து பார்த்த பல படங்களின் ஒன்று 'நான் அவனில்லை'. அதில், அப்பாவின் நடிப்புப் பரிமாணங்களைப் பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட அந்தப் படத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். வணிக ரீதியாக அந்தப் படம் வெற்றிபெறாவிட்டாலும், அது வெளியான காலத்துக்கு மிகவும் முன்னதாக எடுத்தாளப்பட்ட கதை. அதை அப்பாவே தயாரித்ததும் கே.பி. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதும் தமிழ் சினிமாவுக்கான பரிசு என்றே பார்க்கிறேன். கே.பி.யின் பின்னாளைய படங்களில் 'உன்னால் முடியும் தம்பி'யில் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை கதாபாத்திரத்தில் அப்பாவின் நடிப்பு முதிர்ச்சியின் உச்சம் எனத் தோன்றியது.

திரையுலகில் தனது தொடக்கக் காலம் குறித்து, இதுவரை வெளிவராத விஷயங்களை உங்களிடம் பகிர்ந்திருக்கிறாரா? அவருக்கு நிறைவேறாத அபிலாஷைகள் என்று ஏதாவது உண்டா?

எதையும் யாரிடமும் மறைத்ததில்லை என்பது அப்பாவின் உயர்வான குணங்களில் ஒன்று. தனது திரையுலக வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். வாய்ப்புகளை வழங்கியவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்திருக்கிறார். அதில் முக்கியமானது தனது பெயருக்கு முன்னாள் 'ஜெமினி' நிறுவனத்தின் பெயரைச் சேர்த்துக் கொண்டது.

கைக்குழந்தையாக ஜெமினியின் கரங்களில் சதீஷ்.

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு 'சென்ட்ரல் எக்சர்சைஸ்' துறையில் வேலை கிடைத்தது. விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டு அந்தப் பணியில் சேர்ந்திருக்கிறார். மாதம் 200 ரூபாய் சம்பளம். அன்றைய காலகட்டத்துக்கு அது மிகப்பெரிய சம்பளம். ஆனால், முதல்நாள் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து வேலையில் சேர கடிதம் வந்துவிட்டது. அவ்வளவுதான், அந்த ஒரு நாளுடன் அரசுப் பணியை விட்டுவிட்டு ஸ்டுடியோ வேலைக்குப் போய்விட்டார்.

ஜெமினி ஸ்டுடியோவில் அவர் வேலைக்குச் சேர்ந்திருக்காவிட்டால், அறிவியல் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருப்பார். அல்லது ஒரு விமான ஓட்டியாக மாறியிருப்பார். சினிமாவில் இருந்தாலும் அவருக்கு பைலட் ஆக வேண்டும் என்ற கனவும் இருந்தது.

தாத்தாவிடமிருந்து அப்பா பலவித வாத்தியங்கள் கற்றுக்கொண்டார். அவற்றில் மிருதங்கம் என்றால் அவருக்கு உயிர். என்னை மிருதங்கம் கற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தினார். அவர் வாசிக்கும் அழகைப் பார்த்து, 7 ஆண்டுகள் முறையாக மிருதங்கம் கற்றுக்கொண்டபின் எனக்கு அரங்கேற்றம் செய்வித்தார்.

புல்லாங்குழல் வாசிப்பதிலும் அப்பாவுக்குத் தனி ஈடுபாடு. அவரிடமிருந்து அந்த ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொண்டது. திரையுலகில் எல்லாமே அவருக்குச் சிறப்பாகவே அமைந்தன. திறமை இருக்குமிடத்தில் அதிர்ஷ்டம் இருக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? அது அப்பாவுக்கு 100 சதவீதம் பொருந்தும். தனது அத்தையைப் போலவே மருத்துவராக வேண்டும் என்ற அவரது தொடக்கக்காலக் கனவு நிறைவேறாமல் போனது குறித்து தனக்கு வருத்தம் ஏதும் இல்லை என்று சொன்னார்.

உங்கள் தாயரின் மறைவுக்குப் பின், அப்பா உங்களை எப்படி நடத்தினார்?

அப்பாவின் மீது பன்மடங்கு மரியாதையும் பெருமிதமும் கூடியது எனது தாயாரின் இறப்புக்குப் பின்னர்தான். அப்படியொரு 'கேர்' கொடுத்தார். டிசம்பர் 26, 1981, அன்று அக்காள் நாராயணியின் பிறந்த நாள். குடும்பமே மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்க வேண்டிய அந்த நாளில், எனது தாயாரும் நடிகையர் திலகமுமான சாவித்திரி அம்மா மறைந்தார். அதற்கு முன் அப்பா - அம்மா இடையிலான நேசத்தை அறிந்தவன் என்றாலும் அம்மாவின் உடலருகே அமர்ந்துகொண்டு, மனம்விட்டு அவர் கதறிய கதறலை அப்போது பார்த்தேன். அன்று தொடங்கி, பின்னர் நான் பெங்களூருவுக்கு இன்ஜினீயரிங் படிக்கச் செல்லும் காலம் வரை அப்பாவின் அன்பை மேன்மையை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

சிறுவனாக அப்பாவுடன் சதீஷ்.

அம்மாவின் கண்ணுக்குள்ளேயே இருந்து, மிகுந்த பாதுகாப்பான தெலுங்குக் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். அவரது மறைவுக்குப் பின், சின்னஞ்சிறுவனாக ஆசாரம் மிகுந்த ஒரு தமிழ்க் குடும்பத்தில் நுழைந்தபோது, என்னை உடனே அங்கீகரித்து அரவணைத்துக் கொண்டார்கள்.

புதிய குடும்பச் சூழ்நிலையில் பெரிய தயக்கம் இருந்தாலும் என்னைத் தளராமல் பார்த்துக் கொண்டார் அப்பா. அதன்பின்னர் என்னை அவர் வழிநடத்திய விதமும் தயார்படுத்திய விதமும்தான் ஒரு தந்தை மகனுக்கு வழங்கிய மிகப்பெரிய சன்மானமாகத் தோன்றுகிறது. அந்தச் சிறிய வயதில் அம்மாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நான் மனக் குழப்பத்தில் தவித்த நாட்கள் அதிகம். அப்போதெல்லாம், ஆக்கபூர்வமான பல விஷயங்களில் என்னை ஈடுபட வைத்து, வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படச் செய்தார். நான் அவரைச் செல்லமாக 'அப்பாக்குட்டி' என்றுதான் அழைப்பேன்.

நான், கொஞ்சம் வளர்ந்து பெரியவன் ஆனபிறகு, ஸ்டுடியோவுக்கு வெளியே நிஜ வாழ்க்கையில் சக நட்சத்திரங்கள் எப்படி எல்லோரையும்போல் இயல்பாக வாழ்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அன்புக்குரிய நாகேஷ், நம்பியார், கமல்ஹாசன் வீடுகளுக்கு அழைத்துப் போவார். அவர்களுடன் உரையாட அனுமதிப்பார். பெங்களூருவுக்கு என்னைக் காண வந்தபோது, என்னை சரோஜா தேவி அம்மா வீட்டுக்கும் சவுகார் அம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

காலை 5 மணிக்கெல்லாம் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பி மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கே விஜபிகள் எதிரே வந்தாலும் சரி, தனது ரசிகர்கள் வந்தாலும் சரி எல்லோரிடமும் ஒரே மாதிரியான அன்பைப் பொழிவார். தேநீர் விற்பவர் தொடங்கி, கீரைக்கார பெண்மணி வரை அனைவரிடமும் அன்பு காட்டுவார். அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அவருடன் இணைந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகளைத் துள்ளித் துள்ளி ரசித்த நாட்களை மறக்க முடியாது.

அதேபோல, சீசன் தோறும் என்னைக் கொடைக்கானல் அழைத்துச் சென்று நான் கோல்ஃப் விளையாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார். அப்பா சிறுவயது முதலே நல்ல ஸ்போர்ட்ஸ்மேன். எனக்கு மகன் பிறந்தபோது, 'அவனை நல்ல ஸ்போர்ட்ஸ்மேனாக வளர்க்க முயற்சி எடு. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பாவிக்கும் மனப்பாங்கை ஸ்போர்ட்ஸ் கற்றுக்கொடுத்துவிடும்' என்றார்.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அருகிலிருக்கும் 'ரேமண்ட்' கடைக்கு அழைத்துச் சென்று, விலை உயர்ந்த ஆடையை வாங்கிக் கொடுப்பார். எனக்குப் பிடித்த கருப்பு நிறப் பேன்ட்டை எடுப்பேன். 'எனக்காக ஒரு கலர் பேன்ட் எடுத்துக்கோடா...' என்று கெஞ்சுவார். 'நீ மட்டும் நிறைய கருப்பு சூட்ஸ் வைச்சிருக்கியே...' என்றால் 'நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்டா.. செல்லக் குட்டி.. உனக்கு எதுக்கு கருப்பு?' என்பார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தவர் அப்பாதான்.

கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த அனுபவம் எப்படியிருந்தது?

பெரும் கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும். எனது சகோதரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால் இல்லம் அவ்வளவு அழகாகிவிடும். நான் இன்றைக்கு உயர்ந்த ஒரு பதவியிலும் அந்தஸ்திலும் இருப்பதற்கு மட்டுமல்ல; அக்காக்கள் ஒவ்வொருவரும் இன்று தமிழகம் அறிந்த ஆளுமைகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அப்பாவின் வளர்ப்பும் பாப்ஜி அம்மாவின் பாசமும் கண்டிப்பும் மிகுந்த அரவணைப்பும்தான் காரணம்.

என் வளர்ச்சியில் அப்பாவுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு பாப்ஜி அம்மாவுக்கும் பங்கிருக்கிறது. அக்காள்கள் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது. வாழ்வில் எங்கள் குடும்பம் எவ்வளவோ துன்பங்கள், குழப்பங்களைக் கடந்து வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி நெருங்கிய பந்தத்துடன் நாங்கள் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், கூட்டுக் குடும்பத்தை நடத்திச் சென்ற அப்பா - பாப்ஜி அம்மாவின் அர்ப்பணிப்புதான்.

அப்பாவிடம் வியந்த விஷயங்கள்?

மூன்று விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். முதலாவது வாசிப்பு. அடுத்து சமையல். மூன்றாவது தனது ரசிகர்களை அவர் நடத்திய விதம். அவரைப்போல் ஒரு தீவிர வாசகரை நான் கண்டதில்லை. பெர்ட்ரண்டு ரசல் தொடங்கி ஜெயகாந்தன் வரை அவ்வளவு வாசித்தார். தான் வாசிப்பதுடன் நில்லாமல், தான் வாசித்தவற்றில் எவையெல்லாம் சிறந்தவை என்று நினைக்கிறாரோ, அவற்றை 'மஸ்ட் ரீட்' என்று சொல்லி என்னை வாசிக்கச் சொல்வார்.

அப்பாவின் பிறந்த நாளுக்கு புத்தகங்களைப் பரிசளித்தால் அவ்வளவு சந்தோஷப்படுவார். அவர் பரிந்துரைத்த புத்தகத்தை நான் வாசித்து முடித்துவிட்டால், அதைப்பற்றி விவாதிக்க ஆர்வமுடன் உட்கார்ந்துவிடுவார். ஸ்பேஸ் சயின்ஸ், அஸ்ட்ராலஜி பற்றி நிறைய பேசியிருக்கிறோம். 'ஸ்பேஸ், டைம் அன்ட் மேட்டர்' பற்றி அவரைப் பேசச் சொன்னால் நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

அவரது வாசிப்புதான் அவரைச் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் மாற்றியது என்று சொல்ல வேண்டும். அவர் கல்லூரியில் படிக்கிற காலத்தில் சிறந்த ஆரேட்டர். நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறார். இது பலருக்குத் தெரியாது. மேடையில் பேசுவது நடிப்புக் கலையின் ஒரு அங்கம் என்று சொல்லுவார். ஒருமுறை கொடைக்கானல் சீசனுக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள பிரபல பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பேச அழைத்தார்கள். 'நான் குடும்பத்தோடு வந்திருக்கிறேன்' என்றெல்லாம் சாக்குப் போக்குச் சொல்லாமல் கிளம்பிவிட்டார். நானும் கூடவே தொற்றிக்கொண்டேன்.

சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் மத்தியில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களைப் பற்றி எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் ஆங்கிலத்தில் அவ்வளவு அற்புதமான ஒரு உரை. அதில் ஷைலாக் என்ற வில்லன் கதாபாத்திரத்தைப் பற்றி அவர் பேசிய பேச்சு சமூகத்தில் நாம் எப்படிப்பட்ட மனிதனாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது. அதேபோல, துணிச்சலுக்கும் அசட்டுத் துணிச்சலுக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பற்றி மாணவர்கள் முன்பு பேசிய பேச்சு மனதில் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

'எந்தச் சூழ்நிலையிலும் உண்மையைப் பேசுவதற்கு தைரியம் வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து உண்மையைப் பேச பயந்தால் அது கோழைத்தனம்' என்று பேசினார். பேசிய மாதிரியேதான் அப்பா கடைசி வரை வாழ்ந்தார்.

அடுத்து அப்பாவின் சமையல் பற்றிக் கூற வேண்டும். அப்பா சமைக்க ஆரம்பித்தால் நள மகாராஜா தோற்றுப் போய்விடுவார். அவ்வளவு சுவையாக சமைப்பார். 'உயிரை இயக்குவது உணவு. அதற்கு உரிய முக்கியத்துவமும் மதிப்பும் அளிக்க வேண்டும்' என்பார்.

மற்ற பெரிய நடிகர்களிடம் காணத ஒரு அதிசயத்தை நான் அப்பாவிடம் பார்த்திருக்கிறேன். அவர் தனது ரசிகர்களை நடத்தியவிதம் வேறு எந்த நடிகரும் இதுவரை செய்யாத ஒன்று. அவர் தனது ரசிகர்களை ஆத்ம நண்பர்களாகவே அவர் ஏற்றுக்கொண்டார். அப்பா இறக்கும் வரை அவருடன் நெருக்கமாக இருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை எனக்குத் தெரியும். தனது ரசிகர்கள் அறிவாளிகளாக புத்திசாலிகளாக இருக்க வேண்டும், குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

மனைவி, மகனுடன் சதீஷ்.

உங்கள் உடன்பிறந்த சகோதரி விஜயசாமுண்டீஸ்வரி பற்றிக் கூறுங்கள்?

அப்பா என்றால் அக்காவுக்கு உயிர். அப்பாவுக்குப் பிறகு அக்காவுக்கு நான்தான் செல்லம். எதைச் செய்தாலும் அப்பாவிடமும் அக்காள்களிடமும் கேட்டுவிட்டுத்தான் செய்வார். அப்பாவுக்குப் பின் 80 வயதைக் கடந்த அவரது ரசிகர்கள் இன்னும் அக்காவைத் தேடி வந்து பேசிவிட்டு காபி சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்பாவைக் குறித்து மூத்த ரசிகர்கள் எழுதிய நினைவுக் கட்டுரைகள், அப்பாவைப் பற்றி வெளிவராத செய்திகளையெல்லாம் அவர்களது படைப்புகளாகவே பெற்று 'காதல் மன்னன் ஜெமினி கணேசன்: மந்திரச் சொல்' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டுவந்தார். அந்தப் புத்தகத்தை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். மற்றவர்களை அன்பு செய்வதில் விஜயா அக்காவை அடித்துக்கொள்ள முடியாது. அது அப்படியே அப்பாவின் குணம்.

தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் உங்களுடைய தொழில், வாழ்க்கைப் பின்னணி பற்றியும் கூறுங்கள்...

அப்பாவின் ஆத்ம நண்பர்களில் ஒருவரான ஏ.சி.முத்தையாவின் ஸ்பிக் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன்பின்னர் பிறகு லண்டனில் விப்ரோ நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி பிறகு நான் 2003-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தேன். வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பதில் விருப்பமில்லாமல்தான் அமெரிக்காவில் குடியேறி, தற்போது எஸ்.ஏ.பி. என்ற ஜெர்மன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

1991-ல் திருமணம் நடந்தது. எனது ஸ்கூல்மேட் பிரசன்னாவைத் திருமணம் செய்துகொண்டேன். அவர் இங்கே பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். எனது மகனுக்கு 25 வயதாகிறது. பயாலஜி முடித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் 'வெட்னரி சயின்ஸ்' துறையில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x