Last Updated : 20 Dec, 2020 01:08 PM

 

Published : 20 Dec 2020 01:08 PM
Last Updated : 20 Dec 2020 01:08 PM

கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு 

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக 'தி க்ரே மேன்' என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (17.12.20) அன்று ஹாலிவுட் செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான இந்தத் தகவலை சிறிது நேரத்தில் நெட்ஃபிளிக்ஸும் உறுதி செய்தது. ரசிகர்களும், பிரபலங்களும் தனுஷுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் அதிக நபர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பை ஒத்திவைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய ‘தி க்ரே மேன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x