அஜய் தேவ்கன் - அமிதாப் படத்தில் நடிகராக அறிமுகமாகும் 21 வயது யூடியூப் பிரபலம்

அஜய் தேவ்கன் - அமிதாப் படத்தில் நடிகராக அறிமுகமாகும் 21 வயது யூடியூப் பிரபலம்
Updated on
1 min read

யூடியூபில் கேரி மினாடி (Carry Minati) என்கிற பெயரில் பிரபலமான, அஜய் நகர் என்கிற இளைஞர், அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் நடிக்கும் 'மே டே' படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். படத்திலும் சமூக ஊடகப் பிரபலமாகவே இவர் நடிக்கிறார்.

21 வயதான அஜய் நகர், யூடியூப் தளத்தில் கேரி மினாடி என்கிற சேனல் மூலம் பிரபலமானவர். இந்தியாவில் தனி நபர் யூடியூப் சேனலில் அதிக சந்தாதாரர்களை வைத்திருப்பது இவர்தான். மொத்தம் 2.6 கோடி பேர் இவரது சேனலைப் பின்தொடர்கின்றனர்.

தற்போது ‘மே டே’ திரைப்படத்தில் நடிப்பது குறித்துப் பேசியிருக்கும் அஜய், "திரையுலகில் அவ்வளவு பெரிய ஆளுமைகளுடன் இணைவது எனக்குக் கிடைத்த கவுரவம். இந்தப் புதிய சாகசத்தில் பங்கெடுக்க, நடிப்பைப் பற்றி ஒருசில விஷயங்கள் தெரிந்து கொள்ளவிருப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

கடந்த காலத்திலும் எனக்கு நடிக்க வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் நான் நானாகவே பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதால்தான். சிறு வயதில் நான் நடித்துக் காட்டியதும், நான் வளர்ந்ததும் நடிகனாவேன் என்று என் பெற்றோர்கள் நினைத்ததும் எனக்கு நினைவில் இருக்கிறது. இசையைப் போல நடிப்பும் எனக்கு இயல்பாக வரும் ஒன்றுதான். எனவே, அது எனக்குக் கடினம் இல்லை.

எனது ரசிகர்கள் அனைவருக்கும், நான் படைப்பாற்றலின் வரம்புக்குள்தான் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள, பரிசோதிக்கப் போகிறேன். ஆனால் என்றுமே எனது உண்மையான தாகமாகக், காதலாக (யூடியூப்) படைப்புகள் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கும் ‘மே டே’ திரைப்படத்தில் 7 ஆண்டுகள் கழித்து அஜய் தேவ்கனுடன் அமிதாப் நடிக்கிறார். அஜய் இதில் விமான ஓட்டியாக நடிப்பதாகவும், சக விமான ஓட்டியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப் படத்தின் வெளியீடு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 29 அன்று திட்டமிடப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in