

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர்.
பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான படம் 'வர்மா'. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். தயாரிப்பாளருக்கு இந்தப் படம் திருப்தியளிக்காத காரணத்தால், திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
'வர்மா' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார் பாலா. 2 கதைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தார். இரண்டையுமே படமாக்க முயன்று வந்தார். பாலா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக ஜி.வி.பிரகாஷ் தேதிகள் ஒதுக்கினார்.
இதற்கு முன்பாக 'நாச்சியார்' படத்தில் பாலா - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இளையராஜா, யுவன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் மட்டுமே இதுவரை பணிபுரிந்துள்ளார் பாலா. அதிலும் தான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்பதைப் பல பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார் பாலா. அவரும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஜூம் செயலி வழியே பேசி, இந்தப் படத்தை உறுதி செய்திருக்கிறார்கள்.
உங்கள் படத்துக்கு எப்போது இசையமைப்பேன் எனக் காத்திருந்ததாக பாலாவுடன் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆ.ரஹ்மான். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைக் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாக்க முடிவு செய்திருக்கிறார் பாலா.