Published : 12 Oct 2015 12:42 PM
Last Updated : 12 Oct 2015 12:42 PM

3டி-யில் உருவாகும் எந்திரன் 2- அடுத்த பாகத்துக்கும் ஷங்கர் திட்டம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தை முழுவதும் 3டி கேமரா மூலமாகவே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'கபாலி' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவித்தார்கள்.

படத்தின் நாயகி வேடத்துக்கு தீபிகா படுகோனே உள்ளிட்ட சில இந்தி நடிகைகளிடமும், வில்லன் வேடத்துக்கு அர்னால்ட், கமல் உள்ளிட்ட சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். கமல் மறுத்துவிட்டால், யார் வில்லன் என்பதை ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இந்நிலையில், 'எந்திரன் 2' படத்தை முழுவதும் 3டி கேமராவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு தீர்மானித்திருக்கிறது. இதுவரை 2டி கேமராவில் படப்பிடிப்பு நடத்தி, 3டி-க்கு படத்தை மாற்றுவார்கள். இம்முறை முழுவதும் 3டி கேமராவிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 3டி கேமராவில் படமாக்கப்படும் முதல் படம் 'எந்திரன் 2' தான்.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இதற்கான பணிகளில் தீவிரம் காட்டியிருக்கிறார். மேலும், 'எந்திரன் 2' படத்தில் முக்கியமான காட்சியை MOTION CAPTURE தொழில்நுட்பத்தில் பண்ண தீர்மானித்திருக்கிறார் ஷங்கர். தமிழில் 'கோச்சடையான்', ஹாலிவுட்டில் 'அவதார்', 'டின் டின்' போன்ற படங்களில் உபயோகப்படுத்திய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த இருக்கிறார்கள்.

இதுவரை வந்த படங்களை விட ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார் ஷங்கர். படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பு நிறுவனம் "எனக்கு ஒரு நல்ல படமாக கொடுங்கள் போதும். பட்ஜெட் பற்றி எல்லாம் கவலையில்லை" என்று கூறிவிட்டது.

MOTION CAPTURE காட்சிகள் குறித்து விசாரித்த போது, "'எந்திரன் 2' படத்தில் முக்கியமான இடத்தில் அக்காட்சி வருகிறது. அது 'எந்திரன் 3' படத்துக்கு உபயோகப்படுத்தவும் ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்" என்றார்கள்.

'எந்திரன் 2' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் 'எந்திரன் 3' படத்தையும் உடனடியாக இயக்க தீர்மானித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x