நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: கணவர் ஹேம்நாத் கைது

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: கணவர் ஹேம்நாத் கைது

Published on

நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சித்ராவும், ஹேம்நாத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வரும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உட்பட பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் நேற்று (14.12.20) இரவு கைது செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in