Published : 09 Dec 2020 11:49 AM
Last Updated : 09 Dec 2020 11:49 AM

புதிய சங்கத்துக்கு எச்சரிக்கை; விரைவில் சிம்புவுடன் பேச்சுவார்த்தை: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியத் தீர்மானங்கள்

சென்னை

புதிய சங்கத்துக்கு எச்சரிக்கை, தயாரிப்பாளர் புகார் குறித்து சிம்புவுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களைத் தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணி வெற்றி பெற்றுப் பதவியேற்றுள்ளது. முரளி அணியினருக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற டி.ஆர் தலைமையிலான அணியினர் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், முரளி தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

* தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்‌ தமிழக முதல்வருக்கும்‌, துணை முதல்வருக்கும்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌தான்‌ பிரதான சங்கம்‌ என்று அறிவித்த செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ கடம்பூர்‌ ராஜூவுக்கும் இந்தச் செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* 2020-2022ஆம்‌ ஆண்டுகளுக்கான தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும்‌, தேர்தலை மிகவும்‌ சிறப்பான முறையில்‌ நடத்திய நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரனுக்கும், தனி அதிகாரிக்கும்‌, ஒத்துழைப்பு நல்கிய டாக்டர்‌ எம்‌ஜிஆர் ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி நிர்வாகத்தினருக்கும்‌, காவல்துறைக்கும்‌ நன்றி தெரிவித்துத் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌ இனிவரும்‌ காலங்களில்‌ அவர்களது திரைப்படத்திற்கு விபிஎஃப் கட்டணம்‌ செலுத்த மாட்டார்கள்‌ என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும்‌, இதுகுறித்து Digital Service Provider (Qube) நிறுவனம்‌ வருகிற 09.12.2020க்குள் சரியான முடிவு தெரிவிக்காத பட்சத்தில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து Digital Service Provider (Qube) நிறுவனம்‌ முன்பு முற்றுகைப் போராட்டம்‌ நடத்துவது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்ட து.

* தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ நிரந்தர உறுப்பினர்களுக்கு வருடா வருடம்‌ பொங்கல்‌ பரிசு வழங்கி வருவதுபோல்‌ இந்த வருடமும்‌ தயாரிப்பாளர்களின்‌ இல்லத்திற்கே நேரடியாகப் பொருட்கள்‌ செல்ல ஏற்பாடு செய்யப்படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்ட து.

* மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ ஆணைப்படி ஆன்லைன் டிக்கெட் வசதி உள்ள திரையரங்குகளுக்கு மட்டுமே தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினர்கள்‌ திரைப்படங்களை வெளியிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இனி வரும்‌ காலங்களில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ தங்களது திரைப்படத்தின்‌ வேறு மொழி ரைட்ஸ்‌ விற்கும்‌பொழுது நமது சங்கத்தில்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ ஏற்கெனவே இருந்த உறுப்பினர்‌ சேர்க்கைக் கட்டணமான ரூ.3 லட்சத்தினை தற்போது 50% குறைத்து ரூ.1,50,000 மட்டும்‌ செலுத்தினால்‌ போதும்‌ என்று முடிவெடுக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்த்‌ திரைப்பட தயாரிப்பாளர்கள்‌ கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினை நமது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ அலுவலக முகவரியான எண்‌.606, அண்ணாசாலை, சென்னை-6க்கு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டுவரப்பட்டு பையனூரில்‌ உள்ள தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில்‌ தமிழக அரசு ஒத்துழைப்புடன்‌ அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும்‌ அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தர வழிவகை செய்யப்படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* தொடர்ந்து 25 வருடங்கள்‌ சந்தா தொகை கட்டி வந்த வாக்களிக்கத் தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்கள்‌ இன்றைய தேதியிலிருந்து சந்தா தொகை கட்டத் தேவையில்லை. அவர்கள்‌ ஆயுட்கால உறுப்பினர்களாக கெளரவிக்கபடுகிறார்கள்‌ என்று ஏகமானதாகத் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* நமது தாய்‌ சங்கமான தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தினைப் பற்றியும்‌, தேர்தலில்‌ வெற்றி பெற்று வந்த நிர்வாகிகள்‌ பற்றியும்‌ ஊடகங்களில்‌ அவதூறாகப் பேசி, தனியாகப் போட்டி சங்கத்தினைத் தொடங்கியுள்ள டி.ராஜேந்தர்‌, சுபாஷ்சந்திரபோஸ்‌, ஜே.சதீஷ்குமார்‌, சிங்காரவடிவேலன்‌, கே.ராஜன்‌, பி.டி.செல்வகுமார்‌, வை.ராஜா, அசோக் சாம்ராஜ்‌ ஆகியோர்‌ மீது சங்கத்தின் சட்ட விதிகளின்‌படி கடுமையான நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* நமது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சட்ட விதி எண்‌ 16-படி ஏற்கெனவே உள்ள தலைவர் ‌(1). துணைத் தலைவர்கள் ‌(2), கெளரவச் செயலாளர்கள் ‌(2), பொருளாளர் ‌(1) மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்கள்‌ (21) என்ற விதியினைத் திருத்தம்‌ செய்யும்‌ விதமாக இணைச்செயலாளர்கள்‌ (2) சேர்க்க இந்தச் செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டு தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* இனி வரும்‌ காலங்களில்‌ தமிழ்த்‌ திரையுலகில்‌ உள்ள மற்ற எந்த ஒரு சங்கத்தின்‌ நிர்வாகக் குழுவில்‌ இருக்கும்‌ உறுப்பினர்கள்‌, நமது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தேர்தலில்‌ நிர்வாகப் பதவிக்குப் போட்டியிட இயலாது என்று இந்தச் செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டுத் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* தயாரிப்பாளர்‌ மைக்கேல்‌ ராயப்பன்‌, நடிகர்‌ சிம்பு மீது அளித்த புகார்‌ குறித்து ஏற்கெனவே கடந்த நிர்வாகத்தில்‌ எடுத்த முடிவின்‌ அடிப்படையில்‌ சிலம்பரசனை நேரில்‌ அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண்பது என்று முடிவெடுக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ இணைச்செயலாளராக கோட்டபாடி ஜே.ராஜேஷை நியமித்துச் செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டு ஏகமனதாகத் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது. இன்றைய தேதி முதல்‌ கோட்டபாடி ஜே.ராஜேஷ்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ இணைச் செயலாளராகச் செயல்படுவார்‌ என்றும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

* உயர்நிலைக் குழு, டைட்டில்‌ குழு, ஆலோசனைக் குழு, பைலா கமிட்டி போன்ற குழுக்களை அமைப்பதற்கு நிர்வாகிகளுக்கு அதிகாரம்‌ வழங்கி செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ அளித்துத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x