Last Updated : 08 Dec, 2020 02:52 PM

 

Published : 08 Dec 2020 02:52 PM
Last Updated : 08 Dec 2020 02:52 PM

வார்னர் பிரதர்ஸ் எடுத்திருப்பது மிகக் குளறுபடியான முடிவு: கிறிஸ்டோஃபர் நோலன் சாடல்

2021ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அத்தனை திரைப்படங்களும் ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் என்கிற அறிவிப்பை இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டன. இருந்தும் மக்கள் கரோனா அச்சம் காரணமாக அரங்குகளுக்கு வரத் தயங்குகின்றனர். இதனால் ஏற்கெனவே 'டெனட்' படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே தங்களது அடுத்த வெளியீடான 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தை, ஒரே நேரத்தில் ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும், திரையரங்கிலும் வெளியிட வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது.

இதோடு நிற்காமல், அடுத்த வருடம் அந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் அத்தனை படங்களுமே இதே முறையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க அனுபவத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

"என்னால் இதை நம்ப முடியவில்லை. அதுவும் அவர்கள் இதைச் செய்திருக்கும் விதம். யாரிடமும் சொல்லாமல் செய்ததால் இந்த முடிவைச் சுற்றி சர்ச்சையும் எழுந்துள்ளது. அடுத்த வருடம் அவர்கள் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களில், உலகின் மிகச்சிறந்த இயக்குநர்கள், மிகச்சிறந்த நட்சத்திரங்கள் பணியாற்றியுள்ளனர். அதில் சிலர் பல வருடங்களாக, அவர்கள் இதயத்துக்கு நெருக்கமான, பெரிய திரை அனுபவத்துக்கான படங்களில் நடித்துள்ளனர்.

அந்தப் படங்கள் அதிகப்படியான ரசிகர்களைச் சென்று சேர வேண்டியவை. ஆனால், அவை ஓடிடி சேவையைப் பிரபலப்படுத்த குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன. அதுவும் எந்தவித ஆலோசனையும் செய்யப்படாமல். இது மிக மிக குளறுபடியன முடிவு. வாடிக்கையாளரைப் பொய் சொல்லி ஈர்க்கும் முயற்சியைப் போல. இயக்குநர்கள், நட்சத்திரங்கள், இந்தப் படங்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களை நடத்தும் விதம் இதுவல்ல. அவர்கள் படைப்புக்கு என்ன ஆகப்போகிறது என்பதை அவர்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும்.

மிகப்பெரிய இயக்குநர்கள், முக்கியமான நட்சத்திரங்கள் அனைவரும் தூங்குவதற்கு முன்பு, மிக உயர்ந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வேலை செய்திருக்கிறோம் என்று நினைத்தார்கள். தூங்கியெழுந்த பிறகு அவர்கள் மிக மோசமான ஸ்ட்ரீமிங் சேவைக்கு வேலை செய்து கொண்டிருந்ததை அறிந்தார்கள்.

ஒரு இயக்குநரின் படைப்பைத் திரையரங்குகள், மக்களின் வீடுகள் என எல்லா இடங்களிலும் கொண்டு செல்லும் அற்புதமான திறன் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்தது. இதோ நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும்போதே அந்தத் திறன் நீக்கப்பட்டு வருகிறது. அவர்கள் என்ன இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

அவர்கள் முடிவில் பொருளாதார ரீதியாகவும் எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. பங்குச் சந்தைகளில் இருக்கும் சாதாரண, அடிப்படை முதலீட்டாளருக்குக் கூட புதிய முயற்சிக்கும், பிறழ்ச்சிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியும்" என்று நோலன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கிறிஸ்டோஃபர் நோலனின் முதல் இரண்டு படங்களைத் தவிர அவர் இதுவரை எடுத்திருக்கும் 9 திரைப்படங்களிலும் வார்னர் பிரதர்ஸ் நேரடியாகவோ, கூட்டாகவோ தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோலனின் கருத்துக்கு வார்னர் பிரதர்ஸ் தரப்பிலிருந்தோ, ஹெச்பிஓ மேக்ஸ் தரப்பிலிருந்தோ இன்னும் பதில் வரவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x