Published : 07 Dec 2020 10:41 AM
Last Updated : 07 Dec 2020 10:41 AM

யாருக்கும் எதைச் செய்யவும் சுதந்திரம் கிடையாது: மதம் மாற்ற தடை சட்டத்தை சாடிய சித்தார்த்

மதம் மாறுவதற்கு எதிராக உத்தர பிரதேசம் கொண்டு வந்திருக்கும் சட்டத்தை நடிகர் சித்தார்த் சாடிப் பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக சித்தார்த் விமர்சனத்தை முன்வைப்பது புதிதல்ல. மத்தியில் பாஜக பதவியேற்ற காலத்திலிருந்தே மத்திய அரசையும், பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நடக்கும் விஷயங்களையும் சித்தார்த் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்.

தற்போது லவ் ஜிஹாதை முன் வைத்து உத்தர பிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மதம் மாற்றத்துக்கு எதிரான சட்டத்தை சித்தார்த் விமர்சித்துள்ளார். புதிய சட்டத்தின் படி, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரண்டு பேரு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். முறையான விசாரணைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள சித்தார்த், முதலில் ஒரு கற்பனை உரையாடலைப் பகிர்ந்துள்ளார்.

"அப்பா நான் ஒருவரை காதலிக்கிறேன், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

அவன் நம் சமூகத்தைச் சேர்ந்தவனா?

இல்லை.

பரவாயில்லை. முதிர்ந்தவனாக நான் உனது காதலை மதிக்கிறேன். உனக்கு என் ஆசிர்வாதங்கள்.

ஓ.. நாம் மாவட்ட நீதிபதியிடம் சென்று அனுமதி பெற வேண்டும். ஒரு ஊபர் வாகனத்தைக் கூப்பிடுங்கள்" என்று ட்வீட் செய்துள்ள சித்தார்த் இதற்குக் கீழ் புதிய இந்தியா என்று ஹாஷ்டேகில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ட்வீட்டில், "என்ன தைரியம் இருந்தால் வயது வந்த ஒரு பெண் தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்படிச் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பார். அவர்களின் சட்டத்தின் படி யாருக்கும் எதைச் செய்யவும் உரிமை இருக்கக் கூடாது. எதையும் சாப்பிட, பேச, பாட, எழுத, படிக்க, எவரையும் திருமணம் செய்து கொள்ள என எதற்கும் உரிமை கிடையாது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே தெளிவாகச் சொல்லுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x