டிம்பிள் கபாடியாவுக்கு கிறிஸ்டோஃபர் நோலனின் பாராட்டுக் குறிப்பு: அக்‌ஷய் குமார் பெருமிதம்

டிம்பிள் கபாடியாவுக்கு கிறிஸ்டோஃபர் நோலனின் பாராட்டுக் குறிப்பு: அக்‌ஷய் குமார் பெருமிதம்
Updated on
1 min read

நடிகையும், தனது மாமியாருமான டிம்பிள் கபாடியாவுக்கு இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் எழுதிய பாராட்டுக் குறிப்பை நடிகர் அக்‌ஷய் குமார் பகிர்ந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் க்றிஸ்டோஃபர் நோலனின் பிரம்மாண்டப் படைப்பான ’டெனெட்’டில் இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளும் மும்பையில் படமாக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பே அயல் நாடுகளில் வெளியான டெனட், வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் வெளியானது.

வெளியீடை முன்னிட்டு நோலன் டிம்பிள் கபாடியாவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தக் குறிப்பில், "டிம்பிள், வேறென்ன சொல்வது? உங்களோடு பணியாற்றியது அலாதியாக இருந்தது. ப்ரியா கதாபாத்திரத்தை படத்தின் உலகில் நீங்கள் உயிர்ப்போடு கொண்டு வந்ததைப் பார்த்தது அற்புதமாக இருந்தது. உங்களது உயர்ந்த திறமை மற்றும் கடின உழைப்புக்கும், டெனட் படத்துக்கு உங்கள் திறமையை நல்கியதற்கும் நன்றி. என் வாழ்த்துகள்" என்று நோலன் தெரிவித்துள்ளார்.

இதைப் பகிர்ந்திருக்கும் டிம்பிள் கபாடியாவின் மருமகன் அக்‌ஷய் குமார், "இது என் 'பெருமையான மருமகன்' தருணம். பட வெளியீட்டுக்கு முன், டிம்பிள் கபாடியாவுக்கு கிறிஸ்டோஃபர் நோலன் மனதார பாராட்டிக் குறிப்பு எழுதியுள்ளார். நான் என் மாமியாரின் இடத்தில் இருந்திருந்தால் ஆச்சரியத்தில் வாயடைத்து எங்குமே நகர்ந்திருக்க முடியாமல் போயிருக்கும். ஆனால் டெனட் படத்தில் அவரது மாயத்தைப் பார்த்த பிறகு, என்னால் இதைவிடப் பெருமையாக, மகிழ்ச்சியாக உணர்ந்திருக்க முடியாது அம்மா " என்று குறிப்பிட்டுள்ளார். இதோடு கபாடியாவும், நோலனும் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

டிம்பிள் கபாடியாவின் மகள் நடிகை ட்விங்கிள் கன்னா, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை மணந்திருக்கிறார். இவரது இன்னொரு மகள் ரின்கி கன்னாவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in