Last Updated : 05 Dec, 2020 05:54 PM

 

Published : 05 Dec 2020 05:54 PM
Last Updated : 05 Dec 2020 05:54 PM

திரை விமர்சனம் - டெனெட்

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத வியாபாரியான பிரியாவை (டிம்பிள் கபாடியா) சந்திக்கிறார். அவரும் ஒரு டெனெட் உறுப்பினர் என்பதை தெரிந்து கொள்கிறார்.

ப்ரியாவின் மூலம் அந்த துப்பாக்கி குண்டுகள் ரஷ்ய வியாபாரியான ஆண்ட்ரே சாடோர் என்பவரால் வாங்கப்பட்டு டைம்- ரிவர்ஸ் செய்யப்படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்கிறார். நாயகனான ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ ஆண்ட்ரே சாடோர் நெருங்கினாரா? கடந்த காலத்தை அழிக்கக் கூடிய ஆயுதம் என்னவானது? என்பதே ‘டெனெட்’ படத்தின் மீதிக்கதை.

‘டன்கிர்க்’ படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் படம். இந்த ஆண்டின் மத்தியிலேயே வெளியாகியிருக்க வேண்டிய கரோனாவால் இப்போது அப்போது என்று சொல்லி, பல நாடுகளில் கடந்த மாதமே வெளியான நிலையில் ஒருவழியாக நேற்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் கதையை எழுத நோலன் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. அதற்கான காரணத்தை படத்தை பார்க்கும்போதே விளங்கிக் கொள்ளலாம். ‘மெமெண்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ வரிசையில் மற்றுமொரு மூளைக்கு வேலை கொடுக்கும் படம். ஆனால் அப்படங்கள் ஏற்படுத்திய உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ‘டெனெட்’ ஏற்படுத்தியதா என்பதை பார்க்கலாம்.

படம் வெளியாவதற்கு முன்பாகவே இது டைம் ட்ராவல் படமல்ல என்பதை தெளிவாக நோலன் உள்ளிட்ட படக்குழுவினர் விளக்கி விட்டனர். இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது டைம் ரிவர்ஸ் எனப்ப்படும் ஒரு தொழில்நுட்பம். அதாவது காலப்பயணம் போல நாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு போவது போலல்லாமல் ‘டர்ன்ஸ்டில்’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட நுழைவாயிலின் மூலம் காலத்தில் பின்னோக்கிச் செல்வது. அங்கு நாம் மட்டுமே முன்னோக்கிச் செல்வது போலிருக்கும். நாம் பார்க்கும் மனிதர்கள், கார்கள், பறவைகள் என அனைத்தும் பின்னோக்கிச் செல்லும் அவர்களுக்கு நாம் பின்னோக்கிச் செல்வது போல தோன்றும்.

படத்திலும் இதை மிகத் தெளிவாக காட்சிகளிலும் வசனங்களிலும் உணர்த்தியுள்ளனர். வழக்கமாக ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ படங்கள் ஒருமுறை பார்த்தால் புரியாது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் அப்படங்களில் பெரியளவில் ஏதேனும் குழப்பமோ, சிக்கலோ இருக்காது. ஆனால் இப்படத்தை இரண்டு முறை பார்த்தாலும் கூட புரிந்து கொள்வது சிரமமே. இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்ட நோலன் அதை திரைக்கதையாக மாற்றும் விதத்தில் கோட்டை விட்டுள்ளாரோ என்று தோன்றுகிறது.

வழக்கமாக சொல்லப்படும் சாதாரண ரசிகருக்கு புரியாது என்பது போய் இப்போது நோலன் ரசிகர்களுக்கே புரியாது என்ற ரீதியில் தான் இப்படம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவ்வளவு பெரிய ஆபரேஷனுக்கு நாயகன் உடனடியாக நீல் என்பவரை எப்படி நம்புகிறார்? ஆண்ட்ரே சடோரின் மனைவிக்காக ஏன் நாயகன் இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும்? (ஸ்பாய்லர்) படத்தில் இறுதியில் கடந்த காலத்தில் இருந்த கேட் என்னவானார்? (ஸ்பாய்லர்) இவ்வளவு பெரிய ஆபரேஷனுக்கு காரணமான அந்த ‘ப்ரோட்டகனிஸ்ட்’ கதாபாத்திரத்தின் எதிர்கால வெர்ஷன் எங்கே போனது? போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடை இருப்பதாக தெரியவில்லை. சடோரின் மனைவி கேட்டுக்காக நாயகன் மெனக்கெடும் அளவுக்கு அவர்களுக்கு இடையிலான காட்சிகள் அழுத்தமாக சொல்லப்படவில்லை.

இது போல படத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை ஏகப்பட்ட குழப்பங்கள். நோலனின் முந்தைய படங்களிலும் இது போன்ற கேள்விகள் அநேகம் ஏற்பட்டாலும் அவற்றுக்கான விடை படம் முடியும்போதே பார்ப்பவர்களுக்கு கிடைத்து விடும். இரண்டாவது முறை அப்படங்களை பார்க்கும்போது அக்காட்சிகளோட அந்த கேள்விகளுக்கான விடைகளை நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இங்கே திரைக்கதையே சொதப்பல் என்பதால் ஒரு கட்டத்தில் படம் முடிந்தால் போதும் என்ற எண்ணமே ஏற்படுகிறது. டைம் ரிவர்ஸ் பற்றிய புத்திசாலித்தனமான விவரிப்புகள் படம் நெடுக இருந்தாலும் அவை வெறும் விவரிப்புகளாகவே நின்று விடுகின்றன.

‘மெமெண்டோ’ தொடங்கி ‘டன்கிர்க்’ வரைக்கும் நோலன் படங்களில் அறிவியல் ஜாலங்கள் நிறைந்திருந்தாலும் படத்தில் உணர்வுப்பூர்வமான செண்டிமெண்ட் காட்சிகளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் இப்படத்தில் அது குறைவு என்று சொல்வதை விட மொத்தமான மிஸ்ஸிங் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நீல் உடனான நட்பு, கேட் உடனான காதல் என அது போன்ற காட்சிகளுக்கான இடம் இருந்தும் தவறவிட்டுள்ளார் நோலன்.

படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு மற்றும் இசையை சொல்லலாம். ஹான்ஸ் ஜிம்மர் இல்லாத குறையை போக்கியுள்ளார் லுட்விக் கோரன்ஸன். படத்தின் முடிவு நெருங்க நெருங்க பறக்க வைப்பது போன்ற பின்னணி இசை படம் தொய்வடையும் இடங்களை தூக்கி நிறுத்துகிறது.

அதே போல ஒளிப்பதிவு. ஒரே நேரத்தில் திரையின் ஒரு பகுதி முன்னோக்கி செல்வது போலவும் மற்றொரு பகுதி பின்னோக்கி செல்வது போலவும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. நோலனின் முந்தைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹோய்ட்டே வான் ஹோய்ட்டெமாதான் இப்படத்திலும் கலக்கியுள்ளார். குறிப்பாக கார் சேஸிங் காட்சிகள், விமானம் வெடிக்கும் அந்த ஏர்போர்ட் காட்சி, க்ளைமாக்ஸ் என படம் முழுக்க மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார். அடுத்த ஆண்டு சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

பெயரற்ற நாயகனாக நடித்துள்ள ஜான் வாஷிங்டன் மற்றும் நீல் கதாத்திரமாக வரும் ராபர்ட் பேட்டின்சன் இருவருமே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ப்ரியாவாக வரும் டிம்பிள் கபாடியா, ஆண்ட்ரே சடோராக வரும் கென்னத், கேத்தரினாக நடித்துள்ள எலிசெபத் டெபிகி என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளனர்.

படத்தின் நேர அளவை குறைத்து திரைக்கதையை இன்னும் சற்று செதுக்கியிருந்தால் ‘இண்டெர்ஸ்டெல்லாரை’ பின்னுக்குத் தள்ளியிருக்கும் இந்த ‘டெனெட்’. நல்ல ஒலி-ஒளி கொண்ட பெரிய திரையில் ஒரு முறை பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x