

மூத்த நடிகர் நீது கபூர் மற்றும் இளம் நடிகர் வருண் தவான் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ’ஜக் ஜக் ஜியோ’ படத்தின் படப்பிடிப்பில் பங்கெடுத்திருந்தனர். இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மனைவியும், ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர் நீண்ட நாள் கழித்து நடிக்கும் படம் ’ஜக் ஜக் ஜியோ’. கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சந்திகரில் ஆரம்பமானது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அதில் பங்குபெற்ற அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நவம்பர் மாதம் பதிவிட்டிருந்த நீது கபூர், தனக்கு பரிசோதனை நடந்து தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.
தற்போது தொற்று ஏற்பட்டுள்ளதால் 62 வயதான நீதுவை ரன்பீர் கபூர், விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு வரவழைத்து சிகிச்சை ஏற்பாடுகளை செய்துள்ளார். சந்திகரில் அவர் தனியாக இருக்க முடியாது என்பதால் மும்பையில் மருத்துவமனையில் வைத்து அம்மாவுக்கு சிகிச்சை செய்ய ரன்பீர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
படத்தின் இயக்குநர் ராஜ் மேத்தாவும், நாயகன் வருண் தவானும் சந்திகரிலேயே தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளனர். இவர்களோடு அனில் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகிய நடிகர்களும் அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தினர். ஆனால் இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அனில் கபூர், "வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன். எனக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. உங்களின் அக்கறைக்கும், நல் வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார்.