Published : 04 Dec 2020 12:32 PM
Last Updated : 04 Dec 2020 12:32 PM

அவர் மைக் மோகனோ, ராமராஜனோ அல்ல, ரஜினிகாந்த்: அல்போன்ஸ் புத்திரன் பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததை 'நேரம்', 'பிரேமம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். மேலும், தனது பதிவில் ரஜினிகாந்தை விமர்சனம் செய்தவர்களுக்குக் காரசாரமாக பதிலும் அளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. சில தினங்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து தனது அரசியல் வருகை குறித்து ரஜினி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற சூழல் நிலவியது.

அதன்படி நேற்று (டிசம்பர் 3) ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகைக்குத் திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாளத் திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள புத்திரன், "சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்தை விமர்சித்து கருத்துப் பதிவிட்டவர்களுக்கு அல்போன்ஸ் புத்திரன் தனித்தனியாக பதிலளித்துள்ளார்.

"இதேபோல மம்முட்டியும், மோகன்லாலும் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா" என்று ஒருவர் கேட்டதற்கு, "ஏன் ஆதரிக்கக் கூடாது" என்று அல்போன்ஸ் பதிலளித்துள்ளார். மேலும் அதே பயனர், "கேரள மக்கள் முற்போக்குவாதிகள் என்று நினைத்தேனே, அவர்கள் சினிமாவையும் அரசியலையும் கலக்க மாட்டார்களே அதனால் கேட்டேன்" என்று கருத்துப் பதிவிட, இதற்கு, "ஆமாம், அதனால்தான் நானும் மம்முட்டியும், மோகன்லாலும் முற்போக்குவாதிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று அல்போன்ஸ் பதிலளித்துள்ளார்.

இன்னொரு பயனர், "ரஜினிகாந்த், பாஜகவின் வேறொரு வடிவம் என்றும், இதுதான் உங்கள் பதிவில் மிகவும் தரம் குறைந்த, வீணான பதிவு" என்றும் கருத்துப் பகிர, இதற்கு, "பார்ப்போம் யார் வீணாகிறார்கள்" என்று, பதிலளித்துள்ளார்.

"ரஜினி தமிழர்களின் எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுத்தது கிடையாது, இந்தத் திரைப்பட நட்சத்திரங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை ஏமாற்றுவார்கள்" என்கிற ரீதியில் ஒரு பயனர் தொடர்ந்து கருத்துப் பதிவிட, இவரை ஆதரித்தும் எதிர்த்தும் அல்போன்ஸ் புத்திரனைப் பின் தொடர்பவர்களே விவாதிக்க ஆரம்பித்தனர். இந்தப் பதிவுகளுக்கும், அவரவர் பெயரைக் குறிப்பிட்டு அல்போன்ஸ் பதிலளித்துள்ளார்.

"திரைப்படங்கள் உண்மையாக இல்லாமல் போகலாம். ஆனால், கதைகள் திரைப்படமாகும் போது அவை உண்மையாகின்றன இல்லையா. அவர் ராமராஜனோ, மைக் மோகனோ அல்ல. அவர் ரஜினிகாந்த். மக்களுக்கு பொழுதுபோக்குத் தர கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. அவரது வெற்றி பெற்ற படங்களின் விகிதத்தைப் பார்த்தால் அதுபோல இந்த உலகத்திலேயே எந்த நடிகரும் இல்லை. நடிப்பது என்பது சாதாரண காரியமல்ல. மிகக் கடினமான விஷயம்.

அவர் அரசியலுக்குள் நுழைகிறார் என்றாலும் இதே அளவு உழைப்பு, அர்ப்பணிப்பைத் தருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் முதல்வராக வேண்டும் என்று நினைத்தால் முதல்வராவார். அது என் நம்பிக்கை. அவ்வளவே. மேலும் அவரை வேறு யாருடனோ எதற்கு ஒப்பிட வேண்டும். அவர் முழு நேர அரசியலுக்கு வந்தபிறகு முன்னாள் எம்.பி.க்களுடன் நான் ஒப்பிட்டுக் கொள்கிறேன். மேலும் மக்களைப் பற்றி அதிக அக்கறை இருந்தால் நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் பார்த்த மற்ற தலைவர்களோடு ரஜினிகாந்தை ஒப்பிடாதீர்கள்" என்று அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x