Last Updated : 03 Dec, 2020 11:33 AM

 

Published : 03 Dec 2020 11:33 AM
Last Updated : 03 Dec 2020 11:33 AM

கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட் பெயரை சூட்டிய ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம்

ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு நடிகர் சோனு சூட்டின் பெயரைச் சூட்டியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார்.

பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட் உதவியால் பயனடைந்தவர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் தங்கள் கடைகளுக்கு அவர் பெயரை வைப்பது, கடவுளுக்கு நிகராக வணங்குவது என அன்பு காட்டி வருகின்றனர். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு நடிகர் சோனு சூட்டின் பெயரைச் சூட்டியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் சந்திரா ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட் பெயரை நிர்வாகத்தினர் சூட்டியுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஏழைகளுக்காக சோனு சூட் தொடர்ந்து செய்து வரும் மனிதநேயப் பணியே அவரது பெயரைச் சூட்டக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

''நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். தற்போது என்னுடைய நடவடிக்கைளுக்கு இவ்வளவு பெரிய ஒரு நிறுவனம் கவுரவம் செய்திருக்கிறது. இதன் மூலம் உதவி தேவைப்படுவோருக்குத் தொடர்ந்து உதவுதற்கான ஊக்கம் ஏற்படுகிறது''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x