

சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் பிரிவில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறந்த குறும்பட பிரிவில் போட்டியிட ’ஷேம்லெஸ்’ என்கிற திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 திரைப்படங்கள் இந்தப் பிரிவுக்காகக் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.
கீத் கோம்ஸ் இயக்கத்தில் சயானி குப்தா நடித்திருக்கும் ’ஷேம்லெஸ்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கீத் கோம்ஸ் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஒரு திரைப்படமும், ஐந்து குறும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்குக் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்திய திரைப்படக் கூட்டமைப்பே இரண்டு பிரிவுக்கான படங்களையும் தேர்ந்தெடுக்கிறது.
முன்னதாக, ஷார்ட்ஸ் டிவி குறும்படப் போட்டி ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்ற 2000 குறும்படங்களில், நடிகை வித்யா பாலன் இணைந்து தயாரித்திருந்த ’நட்காட்’ என்கிற குறும்படம் வெற்றி பெற்றது. இதனால் இந்தப் படம் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தகுதி பெற்றது. ஆஸ்கர் பற்றி தான் நினைக்கவில்லை என்றும் ஆனால் இது மகிழ்ச்சியே என்றும் வித்யாபாலன் கூறியிருந்தார்.
அதே நேரம், அந்தப் போட்டியில் இறுதிக் கட்டத்தில் பங்கேற்ற ’சவுண்ட் ப்ரூஃப்’, ’சஃபர்’, ’ட்ராப்ட்’ உள்ளிட்ட மற்ற படங்களும் ஆஸ்கர் பரிந்துரைக்கு பரீசிலிக்கப்பட தகுதி பெற்றவையே. இதனால் இந்தியாவின் குறும்பட பரிந்துரை என்ன என்பதில் குழப்பம் நிலவுகிறது.
ஆஸ்கர் போட்டிக்கு தகுதி பெற்ற திரைப்படங்களின் பட்டியல் அடுத்த வருடம் பிப்ரவரி 9 அன்று வெளியாகும். இறுதிப் பரிந்துரை பட்டியல் மார்ச் 15 அன்று அறிவிக்கப்படும்.