

சயானி குப்தா நடித்துள்ள ‘ஷேம்லெஸ்’ குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கீத் கோம்ஸ் இயக்கத்தில் சயானி குப்தா நடித்துள்ள குறும்படம் ‘ஷேம்லெஸ்’. 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் நடித்த ‘நட்கத்’ உள்ளிட்ட குறும்படங்களைப் பின்னுக்குத் தள்ளி இப்படம் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியிலில் நுழைந்துள்ளது.
இதுகுறித்து நடிகை சயானி குப்தா கூறியுள்ளதாவது:
'' ‘ஷேம்லெஸ்’ குறும்படத்தில் நடித்தது ஒரு அருமையான அனுபவம். தற்போது இப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீத் ஒரு அற்புதமான இயக்குநர் மட்டுமல்ல, சக கலைஞர்களிடம் நல்ல முறையில் பழகக் கூடியவர்''.
இவ்வாறு சயானி குப்தா கூறியுள்ளார்.
இப்படத்தில் நடித்திருக்கும் மற்றொரு நடிகரான ஹுசைன் டலால் கூறும்போது, ''சமூகத்தின் இருண்ட உண்மையை அலசும் தனித்துவமான ஒரு கதையை கீத் சொல்ல விரும்பினார். இதை நாங்கள் நேர்மையுடன் சாத்தியமாக்கினோம். இப்போது ஆஸ்கர் வரை வந்துவிட்டோம்'' என்றார்.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் ‘ஷேம்லெஸ்’ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.