Published : 23 Nov 2020 05:48 PM
Last Updated : 23 Nov 2020 05:48 PM

முதல் பார்வை: மிடில் கிளாஸ் மெலடிஸ்

சென்னை

குண்டூரில் ஹோட்டல் ஆரம்பித்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞனின் கனவு நிறைவேறியதா என்பதுதான் 'மிடில் கிளாஸ் மெலடிஸ்'.

கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் ஹோட்டல் வியாபாரம் செய்து வருகிறார் ஆனந்த் தேவரகொண்டா. இவர் செய்யும் பாம்பே சட்னிக்கு என்று பெரிய ரசிகர்கள் உண்டு. ஆனால், அவருக்கோ குண்டூரில் ஹோட்டல் தொடங்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்கு அவருடைய அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனந்த் தேவரகொண்டா குண்டூரில் ஹோட்டல் தொடங்க என்ன செய்தார், அவரது காதல் கை கூடியதா, அப்பாவை எப்படிச் சமாளித்தார், குண்டூரிலும் பாம்பே சட்னி பிரபலமானதா என்பதுதான் திரைக்கதை.

இயக்குநர் வினோத் ஆனந்தோஜுக்கு மிகப்பெரிய பூங்கொத்து. படத்தின் டைட்டிலில் இருந்தே பார்வையாளர்களைக் கதைக்குள் கொண்டு வந்துவிடுகிறார். எந்தவொரு காட்சியிலுமே சினிமாத்தனம் என்பது துளியும் இல்லை. தான் எழுதிய கதையில் எந்தவித கமர்ஷியல் விஷயத்தையும் சேர்க்காமல், கதையோட்டத்தில் காமெடி, சென்டிமென்ட் என அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா பொல்லம்மா, தருண் பாஸ்கர் உள்ளிட்டோரைத் தவிர மீதி அனைவருமே ரொம்ப பரிச்சயம் இல்லாத முகங்கள். ஒவ்வொருவருமே நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்கள்.

நாயகனாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா. அப்பாவின் மீது கோபம் கொள்வது, காதலியை நினைத்து ஏங்குவது, கடையைப் பிரபலமாக்கச் செய்யும் யோசனைகள் எனக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.

நாயகியாக வர்ஷா பொல்லம்மா. நாயகனைக் காதலிப்பது, அப்பாவிடம் காதலனுக்காகச் சண்டையிடுவது என மிகையில்லாமல் நடித்துள்ளார். நாயகனுக்கு நண்பனாக வரும் சைதன்யா, நாயகிக்குத் தோழியாக வரும் திவ்யா இருவருமே பொருத்தமான தேர்வு. இருவருக்குமான காதல் காட்சிகள் அவ்வளவு அழகு.

படத்துக்குப் பெரிய பலம் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு அப்பாவாக நடித்துள்ள கோபராஜு ரமணாதான். அவர் வரும் காட்சிகளில் அவரைத் தவிர வேறொருவரைக் கவனிக்க மறுக்கிறது. மகனைத் திட்டுவது, மகனுக்காக நிலத்தை விற்பது, அந்த நிலத்தை மீட்டெடுக்கப் பேசும் வசனங்கள் என அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். கண்டிப்பாக இனி வரும் தெலுங்குப் படங்களில் இவரை முக்கிய வேடங்களில் பார்க்கலாம். அதிலும் கோபமாக இருப்பதை சட்டை போடுவதிலும், நடப்பதிலும் கூட காட்டியிருப்பது அவ்வளவு அழகு.

'மிடில் கிளாஸ் மெலடிஸ்' படத்தின் மிகப்பெரிய பலமே எதார்த்தமான காட்சியமைப்புகளும் வசனங்களும்தான். ஜனார்த்தன் பசுமார்தியின் கதையும், வசனமும் பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்களும், ஆர்.ஹெச்.விக்ரமின் பின்னணி இசையும் நம்மைக் கதையோடு பயணிக்க வைக்கிறது. அந்த அளவுக்கு இருவரும் நேர்த்தியாகப் பணிபுரிந்துள்ளனர்.

சன்னி குரபடியின் ஒளிப்பதிவு படம் பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு காட்சியையும் நம்பத்தகுந்த வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் மைனஸ் என்றால், இரண்டாம் பாதியில் நாயகனுக்கு சட்னியின் சுவைக்கான ஐடியா தோன்றியவுடனே கடைக்குக் கூட்டம் வரத் தொடங்கியதை நம்ப முடியவில்லை. இன்னும் ஒருசில காட்சிகள் மூலம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம். முதல் பாதியிலிருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

படத்தோடு பயணிக்கும்போது நம்பிக்கையூட்டும் வசனங்கள், எதார்த்தமான காட்சியமைப்புகள், சிரிக்கவைக்கும் காமெடி எனப் பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் ஒன்றவைப்பதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். இந்த 'மிடில் க்ளாஸ் மெலடிஸ்' படத்தைக் கண்டிப்பாக குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x