

‘அரவிந்த சமேதா’ திரைப்படம் தனக்கு மிகவும் விசேஷமானது என்று நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு வெளியான ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ தான் தனக்கு மிகவும் விஷேசமான திரைப்படம் என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
‘அரவிந்த சமேதா’ எனக்கு எப்போதும் விசேஷமான திரைப்படம். ஜூனியர் என்டிஆருடன் நான் நடித்த முதல் படமும் அதுவே. அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திரையிலும் திரைக்குப் பின்னாலும் நான் நிறைய கற்றுக் கொண்ட ஒரு படமாக அது இருந்தது.
என்னுடைய இன்னொரு பக்கத்தை நான் அறிந்து கொள்ள அப்படம் எனக்கு உதவியது. அது போன்ற ஓர் அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் திரிவிக்ரமுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இவ்வாறு பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.