பிரபுதேவா ரகசியத் திருமணம்

பிரபுதேவா ரகசியத் திருமணம்
Updated on
1 min read

சில மாதங்களுக்கு முன்பு, பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருபவர் பிரபுதேவா. இவருடைய நடனத்துக்கும், நடன அமைப்புகளுக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடனம் அமைத்த 'ரவுடி பேபி' பாடல் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

தற்போது இந்தியில் சல்மான்கான் நடித்து வரும் 'ராதே' படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ரகசியத் திருமணம் செய்துள்ளார் பிரபுதேவா. அத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பிரபுதேவாவுக்கு கடும் முதுகு வலி இருக்கும்போது, அவருக்கு பிசியோதெரபி பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்பு, பெண் வீட்டினர் சம்மதத்துடன் சென்னையிலுள்ள பிரபுதேவா இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பெண்ணின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் திருமணத்தில் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிரபுதேவாவுடன் பணிபுரிந்து வரும் யாருக்குமே, இந்தத் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரபுதேவாவுக்கு மீண்டும் திருமணம் என்ற தகவல் வெளியானவுடன்தான் அவர்களும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர். திரையுலகினர் பலரும் பிரபுதேவாவுக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக, பிரபுதேவா ரமலத் என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள். அதில் மூத்த மகன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். பின்பு, நயன்தாராவைப் பிரபுதேவா காதலித்து வந்தார். அந்தக் காதல் ஒருகட்டத்தில் முறிந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in