Published : 18 Nov 2020 11:33 AM
Last Updated : 18 Nov 2020 11:33 AM

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்: தமிழக முதல்வருக்கு விஜயகுமார் கடிதம்

சென்னை

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மொத்தக் கொள்ளளவான 24 அடியில் 21 அடியைத் தாண்டியது.

இதனால், விரைவில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தகவல் வெளியானது.

நீர்வரத்து மேலும் அதிகரித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீரைத் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர் விஜயகுமார் தமிழக முதல்வருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் நடிகர் விஜயகுமார் கூறியிருப்பதாவது:

"வணக்கம்‌. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல்‌, கலைமகள்‌ நகர்‌ பகுதியில்‌ நான்‌ பல வருடங்களாகக் குடியிருந்து வருகிறேன்‌. கடந்த 2015-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌, செம்பரம்பாக்கம்‌ ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரைக்கும்‌ பல ஆயிரம்‌ வீடுகள்‌ சேதமடைந்தன. உயிர்ச்‌ சேதமும்‌ ஏற்பட்டது.

இந்த ஆண்டும்‌ செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ மட்டம்‌ 21 அடியைத்‌ தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமேயானால்‌ 2015-ம்‌ ஆண்டைப்‌ போல பெரும்‌ பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்‌.

ஆகவே, தாங்கள்‌ கவனத்தில்‌ இதைக்‌ கொண்டு, முன்னேற்பாடாக ஏரியில்‌ உள்ள தண்ணீரை அளவுடன்‌ திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால்‌, கரையோரம்‌ இருப்பவர்களுக்கு உயிர்‌ மற்றும்‌ பொருள்‌ சேதம்‌ ஏற்படாமல்‌ தடுக்க இயலும்‌. எனவே தயவுகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்‌கொள்கிறேன்‌.

தங்களால்‌ இதைச் செய்ய இயலும்‌ என நான்‌ ஒருமனதாக நம்புகிறேன்‌. கரோனா என்னும் கொடுநோயிலிருந்து நம்‌ தமிழக மக்களை எவ்வண்ணம்‌ காப்பாற்றிக்‌ கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம்‌ வசிக்கும்‌ மக்களையும்‌ காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌".

இவ்வாறு நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x