சினிமா வாழ்வின் அடுத்தகட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்: ஹ்ரித்திக் ரோஷன்

சினிமா வாழ்வின் அடுத்தகட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்: ஹ்ரித்திக் ரோஷன்
Updated on
1 min read

தன் சினிமா வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.

2000ஆம் ஆண்டு ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான படம் ‘கஹோ நா ப்யார் ஹே’. இப்படத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷன் முதன்முதலில் நாயகனாக அறிமுகமானார். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்த பல்வேறு தகவல்களை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் ஹ்ரித்திக் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''ஆரம்பக் காலங்களில் ஒரே மாதிரியான நடிப்பு முறையைப் பின்பற்றி வந்தேன். ஆனால் ‘காபில்’ படத்துக்குப் பிறகு ஒரு நடிகனாக நான் பரிணாமம் அடைந்துவிட்டேன். அதிகம் மன்னிக்கக் கூடியவனாக மாறிவிட்டேன். அதே நேரத்தில் இப்போது என்னை அதிகமாக நம்புகிறேன். இதன் மூலம் முன்பை விட சிறந்த முறையில் என்னால் பல விஷயங்களை எந்தவித பயமும் இன்றி ஆராய முடிகிறது.

ஒரு நடிகனாக கடந்த 20 ஆண்டுகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு பயணமாக இருந்தது. பலவகையான அனுபவங்களின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இது நன்னெறிகளை வளர்க்க உதவும் ஒரு பணிச்சூழல் என்பதாலேயே நான் இங்கு இருக்கிறேன் என்று தோன்றுகிறது. நன்னெறிகளே ஒருவரைச் சிறந்தவராக மாற்றுகிறது. என் வாழ்வின் ஒட்டுமொத்தக் குறிக்கோளுமே அதுதான்.

பார்வையாளர்கள், கதை சொல்லல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றாக பரிணாமம் அடையும் ஒரு தளமாக நமது துறை இருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. ஒரு நடிகனாக இந்தத் தளத்தில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என் சினிமா வாழ்வின் அடுத்தகட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக இயக்குநர்கள், கதாசிரியர்களுடன் நிறைய ஆலோசித்தேன். நிறைய கதைகளையும் படிக்க நேர்ந்தது. அதில் சில சுவாரஸ்யமான கதைகளைத் திரையில் கொடுக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு ஹ்ரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in