Published : 16 Nov 2020 02:49 PM
Last Updated : 16 Nov 2020 02:49 PM

கரோனாவால் சினிமாவுக்குதான் 100% நஷ்டம்: இயக்குநர் ஆர்.கண்ணன்

கரோனா நெருக்கடி காரணமாக 100 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பது திரைத்துறைதான் என இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியுள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிஸ்கோத்'. திரையரங்குகள் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்து, திரையரங்குகளைத் திறப்பது முடிவானவுடன் அவசரமாக படத்தை வெளியிட்டது படக்குழு. இதற்கான விளம்பரப்படுத்துதல் எதுவுமே நடைபெறவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று 'பிஸ்கோத்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்குப் படக்குழுவினர் சென்றனர். அங்கு ரசிகர்கள் மத்தியில் உரையாடிய பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதாவது:

"கரோனாவால் சினிமாவுக்கு மட்டும்தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், அதற்குள் ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்த அளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்குத்தான் தெரியும்.

ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை ஓடிடியில் வெளியிடலாமா? அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம். திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா மாட்டார்களா? என்ற சந்தேகத்துடனும் தைரியத்துடனும் வெளியிட முடிவு செய்தோம்.

சந்தானம் இல்லையென்றால் இந்தப் படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் 2 மணி நேரம்தான் இருக்கிறது. ரூ.50 லட்சம் இருந்தால்தான் இப்படத்தை வெளியிட முடியும். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சந்தானம் வீட்டிற்குச் சென்று கேட்டேன். அவர் உடனே கொடுத்தார். தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணம் சந்தானம், ரவி ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தார், தேனப்பன் ஆகியோர்.

இப்படத்தில் நடித்த சௌகார் ஜானகி தற்போது பெங்களூருவில் இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துகள் கூறியிருக்கிறார். அவருக்கு இது 400-வது படம். இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருப்பதால் அவர்களை அழைக்க முடியவில்லை.

இந்த கரோனாவால் 9 மாதங்களுக்கான வட்டி மட்டுமே 3 கோடி வந்துவிட்டது. பைனான்சியர் ராம் பிரசாத் அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். வட்டியைக் குறைக்க வேண்டாம். இதுபோன்ற உதவியைச் செய்தாலே போதும்".

இவ்வாறு இயக்குநர் ஆர்.கண்ணன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x