

ட்விட்டர் தளம் இந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சமாக இருப்பதாகவும், தேசத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் ட்விட்டரைத் தடை செய்ய ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளார்.
அவ்வப்போது அதிரடி சர்ச்சைக் கருத்துகளைப் பகிர்வது நடிகை கங்கணா ரணாவத்தின் வழக்கம். சில சமயங்களில் கங்கணாவின் சகோதரி ரங்கோலியும் தன் பங்குக்குச் சர்ச்சைகளைக் கிளப்புவார்.
சமீபத்தில் தனது தந்தையுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைக் கங்கணா பகிர்ந்துள்ளார்.
இதோடு சேர்த்து, "நானும் என் அப்பாவும் ஒரு வழியாக, ஒரு விஷயத்தைப் பொதுவாக ஒப்புக்கொண்ட அரிய புகைப்படம். ஆனால், அது என்னவென்று எங்கள் இருவருக்கும் இப்போது நினைவில்லை.
இன்னொரு விஷயம், இந்திய அரசாங்கம் ட்விட்டரைத் தடை செய்யலாம் என்று தெரிகிறது. இந்திய அரசு அதைச் செய்ய வேண்டும். இந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டும், தேசத்துக்கு எதிரான ஒரு தளம் நம்மை வாயடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை" என்று பகிர்ந்துள்ளார்.
கங்கணா பகிர்ந்திருந்த புகைப்படம்
ட்விட்டர் தளத்தில் இந்திய வரைபடம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்விட்டரைத் தடை செய்ய வேண்டும் என்று ட்விட்டர் தளத்திலேயே ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்தே கங்கணா இந்தக் கருத்தைப் பகிர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மேலும், வியாழக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பக்கத்தில் அவரது முகப்புப் புகைப்படத்தை ட்விட்டர் நீக்கியது. பின்னர் அது மீண்டும் வைக்கப்பட்டது. யாரோ ஒருவர் அந்தப் புகைப்படத்தின் மீது காப்புரிமை கோரியதால், அப்படம் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.