

தன்னை அமைதியாக இருக்கும்படி கூறுபவர்கள் ட்விட்டரில் பின்தொடர வேண்டாம் என்று கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த சிங் தற்கொலையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கியது. சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு நடிகர்களும் அவர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்களுமே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அதிகமாகக் கருத்துத் தெரிவித்தவர் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத். நேரடியாகவே பாலிவுட் பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சாடி வந்தார்.
இது மட்டுமின்றி மகாராஷ்டிர அரசுடனான மோதல், போதைப்பொருள் விவகாரம் எனப் பல விவகாரங்களில் கருத்துத் தெரிவித்து வருகிறார். அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக அவ்வப்போது கங்கணாவைப் பலரும் விமர்சிப்பதுண்டு.
அவ்வாறு விமர்சிப்பவர்கள் தன்னைப் பின்தொடர வேண்டாம் என்று கங்கணா கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
''தினமும் தொடர்ந்து என்னுடைய ட்வீட்களை வந்து பார்ப்பதால் சலிப்பு அல்லது சோர்வடையும் ரசிகர்கள் என்னை அமைதியாக இருக்கும்படி சொல்கிறார்கள். அவர்கள் என்னை ப்ளாக் செய்யலாம் அல்லது என்னைப் பின்தொடராமல் இருக்கலாம். அப்படிச் செய்யவில்லையென்றால் நிச்சயமாக நீங்கள் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீகள். வெறுப்பாளர்கள் போல என்னை நேசிக்க வேண்டாம்''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.