

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட மல்டிப்ளக்ஸ் அரங்குகளுடன் இணைந்து தங்களது வெற்றி பெற்ற திரைப்படங்களை இந்தத் தீபாவளிக்கு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. தீபாவளியின்போது ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவழைக்க இந்தத் திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாகத் திறக்கப்பட்டன. மும்பையில் நவம்பர் 5ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. ஆனால், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும், முகக்கவசம், கிருமி நாசினி, சமூக விலகல் எனப் பல விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு வரவழைக்க, கபீ கபீ, ஸில்ஸிலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹாய், வீர் ஸாரா, பன்டீ அவுர் பப்லி, ரப் நே பனா தி ஜோடி, ஏக் தா டைகர், தப் தக் ஹாய் ஜான், பாண்ட் பாஜா பாரத், சுல்தான், மர்தானி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை, ஒய் ஆர் எஃப் பெரிய திரைக் கொண்டாட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் வெளியிடுகின்றனர். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் 50-வது வருடம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளுக்கு உதவும் வண்ணம் இந்தத் திரைப்படங்கள் எதற்கும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்போவதில்லை. யாஷ் ராஜ் தரப்பும், விநியோகஸ்தர்களும், மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று விரும்புவதால் இந்த அத்தனை பழைய படங்களுக்கும் ரூ.50 மட்டுமே டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"எங்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை மக்களின் மகிழ்ச்சிதான் எங்கள் உலகின் மையப் புள்ளி. எங்களது 50-வது வருடத்தை முன்னிட்டு இந்தப் பெரிய திரைக் கொண்டாட்டத்தை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது ரசிகர்கள் எங்களின் பழைய பிரபலமான, மறக்க முடியாத திரைப்படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்த்து அந்த அனுபவத்தில் திளைக்கலாம்" என்று யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மனன் மேத்தா கூறியுள்ளார்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் இந்த முடிவுக்கு அத்தனை மல்டிப்ளக்ஸ் தரப்பும் ஆதரவும், பாராட்டும் தெரிவித்துள்ளன.