'த்ரிஷ்யம் 2', 'ஈஸ்வரன்' திட்டமிடல்: தயாரிப்பாளர் பாராட்டு
'த்ரிஷ்யம் 2' மற்றும் 'ஈஸ்வரன்' ஆகிய படங்கள் திட்டமிட்டு முடிக்கப்பட்டதற்குத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன், படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 'த்ரிஷ்யம் 2' மற்றும் 'ஈஸ்வரன்' ஆகிய படக்குழுவினர் ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர். இதனால் திரையுலகினர் பலரும் ஆச்சரியப்பட்டது மட்டுமன்றி, படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தக் கரோனா காலத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுக் குறைவான காலத்திலேயே நிறைவு செய்யப்பட்ட மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 2', சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' ஆகிய படங்களிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்கள் இவ்வாறுதான் குறைந்த காலத்தில் தயாரிப்பாளர்களின் செலவைக் குறைக்கும் பொருட்டு திட்டமிட்டு எடுக்கப்பட வேண்டும். அற்புதம்".
இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.
மேலும், 'ஈஸ்வரன்' படத்துக்கான டப்பிங் பணிகளையும் சிம்பு உடனடியாக முற்றிலுமாக முடித்துக் கொடுத்துவிட்டார். சிம்புவின் இந்த வேகத்துக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
