Published : 05 Nov 2020 07:13 PM
Last Updated : 05 Nov 2020 07:13 PM

கட்சியைப் பதிவு செய்தது உண்மை; விஜய்க்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

விஜய்யின் அரசியல் கட்சி விவகாரம் தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விஜய் தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்று பலரும் கருதி வரும் வேளையில், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி செய்திருக்கிறார்.

இது தொடர்பாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"எஸ்.ஏ.சந்திரசேகராகிய நான் கட்சியைப் பதிவு செய்திருப்பது உண்மை. இந்த அமைப்பு நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. 1993-ல் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. 5 ஆண்டுகள் கழித்து அதை நற்பணி மன்றமாக மாற்றினேன். அடுத்த 5 ஆண்டுகள் கழித்து அதை மக்கள் இயக்கமாக மாற்றினேன்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றே மாற்றினேன். அந்த மக்கள் இயக்கத்தை இன்று பதிவு செய்திருக்கிறேன். விஜய்க்காக விஜய் பெயரில் நிறைய நற்பணிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காக மட்டுமே இதைப் பதிவு செய்திருக்கிறேனே தவிர, வேறு எதுவும் கற்பனை செய்துவிடாதீர்கள்.

இதற்கும் விஜய்க்கும் துளியளவும் சம்பந்தமில்லை. ஏனென்றால், அவருக்காக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவன் நான். அவருக்கு முதல் ரசிகன் நான்தான். அந்த அமைப்புதான் பரிமாண வளர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி மாறி ஒரு சமூக அமைப்பாக மாறியிருக்கிறது. இதனால் நான் அரசியலில் நிற்கப் போகிறேன் என்றெல்லாம் கிடையாது. நல்லது பண்ணவேண்டும். அவ்வளவுதான்.

விஜய்க்காக நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஒப்புக் கொள்கிறாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்குப் பிடித்த ஒரு நடிகரை வைத்து நான் செய்து கொண்டிருக்கிறேன். இதில் விஜய் இணைவாரா இல்லையா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்".

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x