

'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிப் பகிர்ந்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே.சரவணன் இருவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், தீபாவளி அன்று நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ட்ரெய்லரைத் தொடர்ந்து படத்தின் பாடல்களைப் படக்குழுவினர் யூடியூபில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் ஆடிக்குத்து என்கிற பாடலை வெளியிட்டிருந்தனர். இதைத் தமிழ்த் திரையுலகின் மூத்த பாடகிகளில் ஒருவரான எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்தார். அந்தப் பாடலிலும் தோன்றியிருந்தார். 80 வயதிலும் எல்.ஆர்.ஈஸ்வரி உற்சாகமாகப் பாடியது குறித்துப் பெருவாரியான ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர். தற்போது வரை 17 லட்சம் பார்வைகளையும் தாண்டி இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்தப் பாடலைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா மீண்டும் திரைக்கு முன் பாடுவது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வணங்குகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.
திடீரென்று ரஹ்மானின் ட்வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்ட படத்தின் இயக்குநர்களில் ஒருவரும், நாயகனுமான ஆர்.ஜே. பாலாஜி, "ரஹ்மான் சார்!!! எங்கள் திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வர் அம்மா பாடி, நடித்தது எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை. எங்கள் திரைப்படத்தின் பாடலை நீங்கள் பார்த்துப் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார். என்றும் உங்கள் ரசிகன்" என்று பதிலளித்துள்ளார்.
ரஹ்மானின் ட்வீட்டால் பாடலுக்கு இன்னும் பெரிய வீச்சு கிடைத்ததில் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.