

பண்ருட்டியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரனின் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பண்ருட்டி எல்என்புரம் ஸ்டேட் பேங்க் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்சி. தாமோதரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகன் திருமணத்துக்காக, தாமோதரன் தன் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி, திருமண வேலைகளை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பண்ருட்டியில்உள்ள தாமோதரன் வீட்டின்முன்பக்க கதவு நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டனர்.
வீட்டில் உள்ளே இருந்த 2 பீரோக்கள் திறந்து கிடந்தன.அதில் இருந்த பொருட்கள் வெளியே வீசப்பட்டு சிதறிக் கிடந்தன. கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று திரும்பியது.
“சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் தாமோதரன் வீட்டிற்கு நேரில் வந்து பார்த்தபிறகுதான் திருடுபோன பொருட்கள் குறித்து தெரிய வரும்” என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தாமோதரன், தற்போதைய தொழில் துறைஅமைச்சர் எம்.சி.சம்பத்தின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.