Last Updated : 04 Nov, 2020 09:26 PM

 

Published : 04 Nov 2020 09:26 PM
Last Updated : 04 Nov 2020 09:26 PM

’பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை’ன்னு டைட்டில் போட்டேன்’; கரண்ட் கட்; சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ராதாவைப் பார்த்தோம்!’’ - பாரதிராஜாவின் அனுபவங்கள்

’பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை’ன்னு டைட்டில் போட்டேன்’; ராதாவைப் பார்க்கப் போகும் போது கரண்ட் கட்; சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ராதாவைப் பார்த்தோம்!’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில் தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

‘அலைகள் ஓய்வதில்லை’. இந்தத் தலைப்பு ஏன் வைத்தோம் தெரியுமா? சில விஷயங்கள்... சென்டிமென்டுகள். ‘நிழல்கள்’ படம் தோல்வி அடைந்தது. சொந்தப் படம். அடுத்து என்ன செய்வது? என்று யோசனை.

சித்ரா லட்சுமணன் என் நண்பன். என்னிடம் அஸோஸியேட் டைரக்டரும் கூட. அப்போது ஒருநாள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, ‘பாரதிராஜா அலை ஓய்ஞ்சிருச்சுன்னு மக்கள் நினைச்சிட்டாங்களா? அடுத்த படத்துக்கு டைட்டில்... ‘பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை’னு வைச்சோம். ’அலைகள் ஓய்வதில்லை’ கதைக்கும் பொருத்தமாக இருக்கும். எனவே இப்படி தலைப்பை வைத்தோம்.

சுவாரஸ்யமான கதை. நான்கைந்து சின்னப் பையன்கள் வேண்டும். சென்னையில் செலக்ட் செய்து அழைத்துக்கொண்டு செல்லலாம் என முடிவு செய்தேன். ஹீரோயின் மட்டும் பார்ப்போம் என்று தேடினோம். ஆர்.சி.பிரகாஷ் என்று என் நண்பர். ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளர். அவர் எப்போதும் என்னுடனே இருப்பார். நானும் அவரும் ‘டான் பாஸ்கோ ஸ்கூலுக்கு சென்று, வாசலில் நின்று நான்கைந்து பையன்களை செலக்ட் செய்துவிட்டோம். ஹீரோவையும் அந்த ஸ்கூலில் பிடித்துவிட்டேன்.

அப்போதுதான், நான் புதிதாக கார் வாங்கியிருந்தேன். அம்பாசிடர் கார். ’கிழக்கே போகும் ரயில்’ முதலாளி எனக்கு வாங்கிக் கொடுத்த கார். பக்கத்தில் ஆர்.சி. பிரகாஷ் உட்கார்ந்திருந்தார்.நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினேன். எதிரில் சைக்கிளில் வந்தான். மோதிக்கொள்ளும்படி ஆனது. விழுந்துவிட்டான்.

எனக்கு ஷாக்காகிவிட்டது. உடனே பிரகாஷ், ‘நீங்க மோதுனதா இருக்கக்கூடாது. நீங்க இந்தப் பக்கம் வாங்க’ என்றார். எனக்கு இந்த டிரிக்கெல்லாம் தெரியவில்லை. அந்தப் பையனைப் பார்க்க இந்திப்பையன் மாதிரி இருந்தான். அவனைத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு தெரிந்த டாக்டரிடம் சென்றேன். ‘நல்லவேளை, நீங்க பாரதிராஜான்னு அவனுக்குத் தெரியல’ என்று பிரகாஷ் சொன்னார். அந்தப் பையன் முனகலாக, ‘நீங்க பாரதிராஜாதானே, எனக்குத் தெரியும் சார்’ என்றான்.

டிரீட்மெண்ட் பார்த்தோம். கையில் கொஞ்சம் பணம் கொடுத்தேன். ’வேணாம் சார், பாரதிராஜாதானே என்னை அடிச்சாரு, பரவாயில்ல சார்’ என்றான் அந்தப் பையன். திரும்ப அந்தப் பையனை இறக்கிவிடச் சென்றிருக்கும் போது, அங்கே நடிகர் முத்துராமனின் வீடு. அந்த வீட்டை க்ராஸ் பண்ணும் போது, வீட்டில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தான் ஒரு பையன். வண்டியை நிறுத்தச் சொன்னேன். ‘அது முத்துராமன் சார் பையன்னு நினைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பையனைக் கூப்பிட்டேன். ‘அப்பா இருக்காரா?’ என்றேன். ’ஃபுட்பால் மேட்ச் பார்க்கப் போயிருக்கார் அங்கிள்’ என்றான்.

‘நீ நடிக்கிறியாடா’ என்று கேட்டேன். ‘டாடிகிட்ட கேக்கணும்’ என்றான். கிளம்பிச் சென்றேன். பிறகு அப்பா வந்ததும் சொன்னான். அவருக்கு ஷாக். உடனே எனக்கு போன் செய்தார். சம்மதம் சொன்னார். அவனுடைய ப்ளஸ் மைனஸ் எல்லாம் சொன்னார். ஓகே செய்தேன்.

சரஸம்மா. அம்பிகா, ராதாவின் அம்மா. அப்போது அம்பிகா பாப்புலர். குடும்பப் போட்டோவைப் பார்த்தேன். இது யாரு, இது யாரு என்று கேட்டேன். கறுப்பா ஒல்லியாக ஒரு பெண் இருந்தார். ‘இந்தப் பெண் தான் வேண்டும்’ என்றேன்.

பிறகு பிரதாத் ஸ்டூடியோவுக்கு அம்மா, அவரை கூட்டி வந்து அறிமுகப்படுத்தினார். ‘விழியில் விழுந்து’ சிறிய பாடல் வேலை நடந்துகொண்டிருந்தது. போட்டோ எடுத்தேன். ஓகே என்று அனுப்பிவிட்டேன். ஒளிப்பதிவாளர் கண்னனுக்கு இதெல்லாம் தெரியாது.

நாகர்கோவில். லோகேஷன் பார்த்தோம். ஹீரோ, ஹீரோயினைக் காட்டுகிறேன் என சொல்லியிருந்தேன். ஹீரோயினைக் காட்டுவதற்காக திருவனந்தபுரம் தாண்டி உள்ள அவர்கள் ஊருக்கு, வீட்டுக்குப் போனோம். தூங்கிக்கொண்டிருந்தார் ராதா. பிறகு எழுந்து வந்தார். கரண்ட் கட்டாகிவிட்டது. சிம்னி விளக்கு வைத்துக்கொண்டு, வீட்டைச் சுற்றிக் காட்டினார். அந்த சிம்னி விளக்கில், தேவதை போல் தெரிந்தார் எனக்கு. ஒளிப்பதிவாளர் என்ன சொல்வாரோ என்று யோசனை. அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
பிறகு படப்பிடிப்பு. பூஜை. ஒரு பாடல் எடுக்கவேண்டும். ஒரு கோயிலில், கார்த்திக்கையும் ராதாவையும் நிற்க வைத்து டைட் க்ளோஸப்பில் எடுத்தேன். ‘இதுக்கு மேல ஜோடியே தேவையில்ல’ என்று சொல்லிவிட்டேன்.

முட்டம். அங்கேதான் படப்பிடிப்பு. இன்றைக்கு மிகப்பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ’உனக்கு புதியதொரு காலை பிறக்குது இன்னிலேருந்து’ என்று சொல்லி, முதல் ஷாட் வைத்து, பாடல் ஷூட் பண்ணினேன். ‘புத்தம்புதுக்காலை... பொன்னிற வேளை’ பாடல்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x