Published : 04 Nov 2020 13:37 pm

Updated : 06 Nov 2020 09:55 am

 

Published : 04 Nov 2020 01:37 PM
Last Updated : 06 Nov 2020 09:55 AM

நடிக்க வந்து 12வது வருடத்தில் அசுர வேக சாதனை;  சிவாஜியின் 100வது படம் வெளியாகி 56 ஆண்டுகள்!  ‘இரவினில் ஆட்டம்’, ‘தங்கச்சரிகைச்சேலை எங்கும் பளபளக்க..’ நவராத்திரி சுபராத்திரி’ பாடல்கள்! 

56-years-of-navarathiri-sivaji

ஒருவர் நடித்த அல்லது இயக்கிய முதல் படம் என்பது அவரின் திரை வாழ்வில் ஒரு ஆரம்பம்தான். அதேசமயம், அவருடைய 25வது, 50வது, 100வது படங்களெல்லாம் அவர் திரையுலகில் நிகழ்த்திய சாதனைப் பயணத்தின் மைல்கற்கள். அந்த மைல்கற்களை, சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்கள், தமிழ்த் திரையுலகம் என எவராலும் எதனாலும் மறக்கவே முடியாது. நடிகர்திலகத்தின் திரைப் பயணம் என்பது அசாதாரணமானது. அவரின் திரை வரிசையில் 100வது படம் மிக மிக முக்கியமான படமாக அமைந்தது. மிக மிக முக்கிய சாதனையை நிகழ்த்தியது. அப்படி நிகழ்த்திய 100வது படம்தான் ‘நவராத்திரி’.

1952ம் ஆண்டு ‘பராசக்தி’ மூலம் திரைத்துறைக்கு வந்த சிவாஜி கணேசன், தன்னுடைய 100வது படத்தை 64ம் ஆண்டில் படைத்துத் தந்தார். பனிரெண்டு வருடங்களுக்குள் சிவாஜி எடுத்திருந்த விஸ்வரூபங்கள் ஏராளம். ஆனாலும் 100வது படமான ‘நவராத்திரி’யில், சிவாஜி இன்னொரு ரூபமெடுத்தார். சொல்லப்போனால், ஒன்பது ரூபங்களெடுத்தார். ஒன்பது வேடங்களில் நடித்தார்.


ஒரு கேரக்டர்... அந்தக் கேரக்டருக்கு காட்சிக்குக் காட்சி, நடிக்கவும் நடக்கவும் என பல பரிமாணங்கள் காட்டிக் கொண்டிருக்கும் சிவாஜிக்கு, ஒன்பது வேடங்கள் என்றால், அவர் காட்டுகிற வெரைட்டிக்கும் ஸ்டைலுக்கும் தனியே சொல்லவேண்டுமா என்ன?

இளைஞன், பணக்காரர், ரவுடி, தொழுநோயால் பாதிப்படைந்தவர், மருத்துவர், கூத்துக்கட்டுபவர் என ஒவ்வொரு விதமான கேரக்டரை, ஒவ்வொரு விதமாகப் பண்ணியிருப்பார் சிவாஜி. டெக்னாலஜி, டிஜிட்டல், கிராபிக்ஸ் என பெயர் கூட உச்சரிக்காத காலகட்டத்தில்தான், இந்த ஒன்பது கதாபாத்திரங்களைச் செயல்படுத்தியதை விடுங்கள். யோசித்ததற்கே விருதும் பதக்கங்களும் கொடுக்கவேண்டும்.

பின்னாளில் புராணப் படங்களுக்கு அத்தாரிட்டி என்று போற்றப்பட்ட ஏ.பி.நாகராஜன், இந்தப் படத்தை தயாரித்து இயக்கினார். பின்னாளில், ’திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’ மாதிரியான படங்களையும் ‘தில்லானா மோகனாம்பாள்’ மாதிரியான காவியங்களையும் படைத்திட்ட ஏ.பி.நாகராஜன் தனது மூன்றாவது படமாகக் கொடுத்ததுதான் சிவாஜியின் 100வது படமான ‘நவராத்திரி’.

62ம் ஆண்டு சிவாஜியை வைத்து, ‘வடிவுக்கு வளைகாப்பு’ கொடுத்தார். 63ம் ஆண்டு சிவாஜியை வைத்து ‘குலமகள் ராதை’யைத் தந்தார். 52ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த சிவாஜியிடம் இருந்து வட்டியும் முதலுமாக நடிப்பைப் பெற்றுவிட வேண்டும் என தீரா ஆசை கொண்டிருந்தாரோ என்னவோ... 64ம் ஆண்டில் ‘நவராத்திரி’யைப் படைத்தார். இந்தப் படத்தைக் கொடுத்து, முன் - பின் என்பதையெல்லாம் சமன் செய்துகொண்டார் ஏ.பி.என்.

ஒன்பது சிவாஜி புதுசு. ஆச்சரியம். பார்த்தால் கதையே இன்னும் அதிசயம்தான். கல்லூரியில் படிக்கும் மாணவி உடன் படிக்கும் மாணவனைக் காதலிப்பார். இந்த சமயத்தில், பெண்ணின் தந்தை, திருமணம் செய்துவைக்க முடிவு செய்வார். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பார். இதைக் கேட்டு நொந்து போவார் மகள். ஆனால் தான் காதலிப்பவன் தான், மாப்பிள்ளையாக தன்னைப் பார்க்க வரப்போகிறான் என்பதை அறியாமல், வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள் மகள்.

இப்படி வெளியேறுவதும் அந்தக் காலத்தில் புதுசுதான். அப்படி வீடு விட்டு வந்த பெண், ஒன்பது நாட்கள் ஒவ்வொருவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார். அந்த ஒன்பது இரவுகள்தான் ‘நவராத்திரி’யின் கதை.

இந்தப் படத்தை இரண்டுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்பது நாளும் சந்திக்கிற மனிதர்கள்... அந்தக் கேரக்டர்கள்... அவற்றை நாயகனே செய்வதால் இதை ஹீரோவுக்கான கதை என்று எடுத்துக்கொள்ளலாம். கல்லூரி மாணவி, வீட்டை விட்டு வெளியேறி, ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறாள், இறுதியில் என்னாகிறாள் என்பதைச் சொல்லுவதால், இது நாயகி சம்பந்தப்பட்ட, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்றும் எடுத்துக்கொள்ளலாம். ‘நவராத்திரி’ என்பதே அம்பிகைக்கு உரிய பண்டிகைதானே!

நாயகன் சிவாஜி. நாயகி சாவித்திரி. இருவரும் திகட்டத் திகட்ட, அலுக்காமல் சலிக்காமல் நடிப்பை வள்ளலென வழங்கிக்கொண்டிருப்பவர்கள். ‘நவராத்திரி’யிலும் அப்படித்தான். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு, நடித்திருப்பார்கள். அற்புதம், இரக்கம், பயம், கோபம், சாந்தம், சிங்காரம், வெறுப்பு, வீரம், ஆனந்தம் என நவரசங்களையும் ஒன்பது கதாபாத்திரங்கள் மூலமாக நவரசம் காட்டி பிரமாதப்படுத்தியிருப்பார் சிவாஜி. அந்த ஒன்பது பேருக்குத் தக்கபடி, ஒன்பது சிவாஜிகளுக்கு ஏற்றபடி நவரசங்களுக்குத் தகுந்தது போல், தன் முகபாவங்களாலும் பரிதவிப்பாலும் படபடப்பாலும் ஏக்கதுக்கத்தாலும் நவரசங்கள் காட்டியிருப்பார் சாவித்திரி.

‘நவராத்திரி சுப ராத்திரி’ என்று ஆனந்தமாக ஆரம்பிக்கும் படம், போகப் போக, ஒவ்வொரு நாளையும் சாவித்திரி கடக்கக் கடக்க, பெற்ற வயிறு என்றில்லாமல் படம் பார்க்கிறவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருந்தார்கள்.

விவசாயி சிவாஜி வெள்ளந்தி என்றால் ரவுடி சிவாஜி மிரட்டல். ஜமீன் சிவாஜி அடக்கம் என்றால் போலீஸ் சிவாஜி அதட்டல். தொழு நோய் சிவாஜி பரிதாபம் என்றால் கூத்துக்கார சிவாஜியோ பச்சாதாபம். நடிகர் சிவாஜிக்கு ஒன்பது கேரக்டர் சிவாஜியும் போட்டி என்றால் பத்தாவது போட்டியாக சாவித்திரியும் சிவாஜியை உண்டு இல்லையென்று நடிப்பில் போட்டி போட்டிருப்பார்.

‘சிவாஜியாவது ஸ்டைல் மன்னனாவது’ என்று யாரேனும் நினைத்தால், இதில் வரும் ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடலையும் பாட்டுக்கு சிவாஜியின் மிரள வைக்கிற விழிகளையும் போதையில் நடக்கிற விதத்தையும் பார்த்தால் போதும்.. மிரண்டுதான் போவார்கள்.

மேடையில் சிவாஜியும் சாவித்திரியும் ‘அதாகப்பட்டது...’ என்று ஆரம்பித்து ‘தங்கச்சரிகைச்சேலை’ என்று அதகளம் பண்ணுவார்கள். இந்தப் பாடல் முடிந்தும் கூட தியேட்டரில் கரவொலி அடங்க நேரமாயிற்று என்பார்கள்.

ஒவ்வொரு சிவாஜியும் அதாவது ஒவ்வொரு கேரக்டரும் வந்துவிட்டுச் செல்ல, நம் மனதை விட்டு அகலாமல் அப்படியே நின்றுகொண்டார்கள். படத்தின் இறுதியில், தன் காதலனே மாப்பிள்ளை பார்க்க வரவிருந்தான் என்பதை அறிந்து, காதலனைச் சந்திக்க, கல்யாணத்தில் சுபமாக முடியும். அந்தக் கல்யாணத்துக்கு, நாயகி சாவித்திரி சந்தித்த மனிதர்களையெல்லாம் அழைத்திருப்பார். வந்தவர்கள்... ஒரே ஃபிரேமில் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். அங்கே, நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு சிவாஜிக்கும் கேரக்டரைஸேஷனைக் கொண்டே ஒவ்வொரு விதமாக உட்கார்ந்து, புன்னகைத்து, ஆசீர்வதித்து அசத்திக் கொண்டிருப்பார் சிவாஜி.
’நவராத்திரி சுபராத்திரி’, ‘சொல்லவா... பிறந்த கதை சொல்லவா’, ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’, ’போட்டது முளைச்சிதடி கண்ணம்மா’, அதற்கு முன்பு வந்த பல பாடல்களின் மெட்டுகளில் அமைந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரி கலாட்டாப் பாடல், ’ராஜாதிராஜா வந்தேனே...’ என்கிற எட்டுநிமிடப் பாடல்... ‘தங்கச்சரிகைச் சேலை... எங்கும் பளபளக்க’ என்ற அந்தப் பாடல் என்று எல்லாப் பாடல்களையும் இனிய பாடலாக்கிக் கொடுத்திருந்தார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். ஒவ்வொரு பாடலிலும் தனக்கே உண்டான தத்துவார்த்தங்களையும் வாழ்வியலையும் வார்த்தைக்கு வார்த்தை கோர்த்துக்கொடுத்து பாடலாக்கியிருந்தார் கவியரசர் கண்ணதாசன். ’இரவினில் ஆட்டம்’ பாடலில் அந்த நாயகனின் மன நிலையை அப்படியே பிரதிபலித்திருப்பார் கவிஞர்.

வீட்டை விட்டு பெண் ஓடிவிட்டாள் என்று நெகட்டீவ் விஷயத்தை எடுத்துக் கொண்ட கதைதான் என்றாலும் அவள் சந்திக்கிற மனிதர்கள் ஒவ்வொருவரும் மனிதத்துடன், நேயத்துடன்,மனித நேயத்துடன் இருக்கிறார்கள் என்று பாஸிட்டீவ் திரைக்கதையில் எனர்ஜியைத் தந்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.

‘நவராத்திரி’ என்று டைட்டில். டைட்டில் முடிந்ததும் அது சம்பந்தமான பாடல். மற்றபடி நவராத்திரிக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், முந்தைய காட்சிகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளைப் படமாக்கி, அந்த பொம்மைகளைச் செய்தவர்களுக்கும் டைட்டிலில் பெயர் பதிவிட்டிருப்பார் ஏ.பி.என். அவரே தயாரித்து, கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

1964ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘உல்லாச பயணம்’ வெளியானது. இந்தப் படத்துக்கு இசை கே.வி.மகாதேவன். இதேநாளில், சிவாஜி, தேவிகா நடித்து, பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘முரடன் முத்து’ வெளியானது. இதற்கு டி.ஜி.லிங்கப்பா இசை. இந்தநாளில்தான் எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ஜி.என். வேலுமணி தயாரிப்பில், டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் ‘படகோட்டி’ வெளியானது. இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள்.

இந்தநாளில், ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கி, சிவாஜியும் சாவித்திரியும் நடித்த ‘நவராத்திரி’ வெளியானது. நடிகர் திலகத்தின் 100வது படம் எனும் பெருமையைக் கொண்டது ‘நவராத்திரி’. படம் வெளியாகி, 56 ஆண்டுகளாகிவிட்டன. நடிகர்திலகத்தின் 100வது படம் வெளியாகி 100 ஆண்டுகளாகின்றன என்று அப்போதும் கொண்டாடுவார்கள்.

படப்பட்டியலின் சாதனையுடன் சிவாஜியின் பெருஞ்சாதனையையும் இணைத்து கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள். கொண்டாடிக்கொண்டே இருப்போம்!

தவறவிடாதீர்!


நடிக்க வந்து 12வது வருடத்தில் சிவாஜியின் அசுர வேக சாதனை;  சிவாஜியின் 100வது படம் வெளியாகி 56 ஆண்டுகள்!  ‘இரவினில் ஆட்டம்’‘தங்கச்சரிகைச்சேலை எங்கும் பளபளக்க..’ நவராத்திரி சுபராத்திரி’ பாடல்கள்!நவராத்திரிசிவாஜியின் நவராத்திரிசாவித்திரியின் நவராத்திரிஏ.பி.நாகராஜன்கே.வி.மகாதேவன்ஒன்பது வேடங்களில் சிவாஜிசிவாஜியின் 100வது படம்100வது படம் நவராத்திரிNavarathiriSivajiSavithiriA.p.nagarajanK.v.mahadevan56 years of navarathiri

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x