

'லக்ஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா ஆகாதா என்பது குறித்த கேள்விகள் பாலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
பாலிவுட் முன்னணி நடிகர்களில் முதன் முதலில் நேரடி டிஜிட்டல் வெளியீடாக தனது படத்தை வெளியிடுவது நடிகர் அக்ஷய் குமார் தான். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தத் திரைப்படம் வெளியாகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், தீபாவளியை முன்னிட்டு 'லக்ஷ்மி' திரையரங்கில் வெளியாகுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஓடிடியில் வெளியாகும் படங்களை திரையரங்கில் வெளியிடப்போவதில்லை என மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் ஏற்கனவே முடிவெடுத்து அறிவித்து விட்டனர். ஆனால் இந்தியாவில் நகர் புறங்களைத் தாண்டி இருக்கும் தனித் திரையரங்குகளின் எண்ணிக்கையே அதிகம்.
எனவே அக்ஷய் குமார் போன்ற ஒரு பெரிய நாயகனின் திரைப்படத்தைப் பார்க்க மக்கள் திரையரங்குக்கு வருவார்கள். வியாபாரத்தை மீட்டெடுக்க இது உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கண்டிப்பாக 'லக்ஷ்மி' திரைப்படம் திரையரங்கில் வெளியாகாது என்றும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படாது என்றும் உறுதியாகச் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மே மாதம் ஈத் பண்டிகையின் போது 'லக்ஷ்மி' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அப்போது கரோனா நெருக்கடி பெரிதாகவில்லை. ஆனால் ஊரடங்குக்குப் பிறகு, ஈத் பண்டிகையும் முடிந்த நிலையில் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவே. அவர்களே டிஸ்னி + ஹாஸ்டாரில் வெளியாக ஒப்பந்தமிட்டிருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்தில் கண்டிப்பாக படம் திரையரங்கில் வெளியாகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளில் ஹாஸ்டாரின் வீச்சு குறைவென்பதால் அங்குள்ள அரங்குகளில் படம் வெளியாகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தால் மட்டுமே இந்தியத் திரையரங்குகளில் 'லக்ஷ்மி' வெளியாகும். எப்படியும் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அப்படி எந்த ஒரு அதிசயமும் நடக்குமென நம்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்பதே வர்த்தக நிபுணர்களின் கருத்து.