Published : 01 Nov 2020 14:50 pm

Updated : 01 Nov 2020 14:51 pm

 

Published : 01 Nov 2020 02:50 PM
Last Updated : 01 Nov 2020 02:51 PM

எஸ்.பி.பி.யின் ‘இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’; பாலசந்தரின் சரியான தாளங்கள்... ‘தப்புத்தாளங்கள்’! 

42-years-of-thappputthalangal


’இதை ஒரு கதையா பண்ணினா, நல்லாருக்காதே’ என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ‘இந்தக் கதையைப் படமா எடுத்தா, பாக்கமாட்டாங்களே’ என்று புறக்கணித்துவிடுவார்கள். ‘இவங்களோட உலகத்தையும் வாழ்க்கையையும் மனசையும் காட்டினா, எடுபடுமா?’ என்று யோசித்து, யோசிக்காமலே விட்டுவிடுவார்கள். ஆனால், அப்படி ஒதுக்கப்பட்டவர்களின் உணர்வுகளை, அவர்களின் மனங்களை, வலிகளை, வேதனைகளை, அவமானங்களை, ஆசைகளை, கனவுகளை தமிழ்த் திரையில் தைரியமாகவும் உண்மையாகவும் உலவவிட்டவர்களில் மிக முக்கியமானவர்... மிக மிக முக்கியமானவர்... இயக்குநர் கே.பாலசந்தர்.

வார்த்தைக்குத் தக்க தாளமும் தாளத்துக்கு இணையான வார்த்தைகளும் கொண்டு ராககீதம் இசைக்கும்போது, அதுவொரு தனி சுகம். பரமசுகம். ஆனந்தம். பேரானந்தம். ஆனால், தப்புத்தப்பான தாளங்கள் கொண்டது வெறும் இசையாக இல்லாமல், வாழ்க்கையாகவே இருந்தால்… அங்கே என்னென்ன சோகங்கள், துயரங்கள், வேதனைகள், வலிகள். அப்படியான சகலத்தையும் ஒன்றிணைத்து நம்மை உலுக்கியெடுத்ததுதான் ’தப்புத்தாளங்கள்’. சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் வாழ்வியலை, இருட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையைச் சொன்னதுதான் ‘தப்புத்தாளங்கள்’.


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சிகரங்களில் இதுவும் ஒன்று. அவரின் சரியான ராகங்களாகவும் தப்பே இல்லாத தாளங்களாகவும் அமைந்த படங்களில் ‘தப்புத்தாளங்கள்’ படமும் உண்டு. எடுத்துக்கொள்ள அஞ்சுகிற கதைக்களம். சொல்லப்பட்ட விதத்தில் பொளேர் ரகம். இந்தநாள் வரைக்கும், இப்படியொரு கதையைத் துணிச்சலாகத் தொட எவரும் முன்வரவில்லை.

விபச்சார புரோக்கரில் இருந்து தொடங்குகிற கதை. அவன் கிராக்கி பிடித்து கொண்டுபோய் விடும் இடம் சரிதாவின் வீடு. அவளின் பெயர் சரசு. அதேஊரில் சோமன் என்பவன். பெண்கள், போகத்துக்கு என திரிபவன். அலுக்கும் வரை வீட்டில் வைத்து உல்லாசமாக இருப்பான். சலித்துவிட்டால், அவளுக்கு பணமெல்லாம் கொடுத்து, அனுப்பிவிடுவான். அப்படி அனுப்புவதாக இருந்தால், அங்கே இன்னொருத்தி வந்திருக்கிறாள் என்று அர்த்தம்.

அவனை அடிக்கணும், இவனை உதைக்கணும். அந்தக் கூட்டத்தைக் கலைக்கணும். சோடாபாட்டில் வீசணும் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் வைத்திருப்பவன் தேவு. முறுக்கு மீசையும் சைக்கிள் செயினுமாக வலம் வருபவன். தேவுதான் ரஜினி.


அந்த புரோக்கர், அந்த விபச்சார சரசு, போகத்துக்கு பெண்களைப் பயன்படுத்தும் சோமன், அடித்து உதைத்து காசு பார்க்கும் தேவு… இவர்களே தப்புத்தாளங்கள்.
தேவு, சோமன் ஒருவகையில் சகோதரர்கள்தான். பல ஆண்களுக்குப் பிறந்தவன் தேவு. அவனின் அம்மா திருந்தி ஒருவனுடன் வாழ, அடுத்ததாகப் பிறக்கிறான் சோமன். அதனால் இருவரும் கிழக்கு மேற்கு. எலிபூனை. கீரிபாம்பு. சொல்லப்போனால், தேவுவை ஒருவிதமாகவும் சோமனை ஒருவிதமாகவும் வீடு நடத்தியதால்தான் இப்படியாக ரவுடியாக மாறினான் தேவு.

போலீஸ் துரத்த தேவு ஓடிவந்து ஒளியும் இடம் சரசுவின் வீடு. அப்படித்தான் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். வந்த வீடு எதுவென்று அவனுக்குத் தெரிகிறது. அவன் யார் என்பது அவளுக்குப் புரிகிறது. அங்கே சின்னதான நட்பொன்று முளைவிடுகிறது. அது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து, ஒருகட்டத்தில், ‘இந்தத் தொழிலே வேணாமே’ என்கிற முடிவுக்கு இருவருமே வருகிறார்கள். அங்கே காதல் சரியான தாளகதியில் உதிக்கிறது. ‘தப்புத்தாளங்கள்’ சரி செய்ய இதுவே சரி என்று முடிவெடுக்கிறார்கள்.

விபச்சாரத்தை விடச் சொல்கிறான் அவன். அடிதடியை விடு என்கிறாள் அவள். இருவரும் தப்பில் இருந்து விலகுகிறார்கள். சேர்ந்து நல்வாழ்வுக்கான பாதையைத் தேடுகிறார்கள். ஆனால் நல்லவர்களை இந்தச் சமூகம் வாழவிடுவதில்லை. குறிப்பாக, திருந்தியவர்களை வாழவேவிடுவதில்லை. இந்தச் சமூகத்தின் தப்புத்தாளங்கள் இவை. இதைத்தான், இந்தச் சமூகத்தைத்தான் பொளேர், சுளீர், பளீரென அறைந்து அறைந்து அறைகூவல் விடுத்திருப்பார் கே.பாலசந்தர்.

முதல் சந்திப்பிலும் அடுத்த சந்திப்பிலும் இருமிக்கொண்டிருப்பார் சரிதா. ஏன் இருமிக்கிட்டே இருக்கே என்று கேட்பார் ரஜினி. இங்கே வர்றவங்க காசை மட்டும் கொடுத்துட்டுப் போறதில்லை. வியாதியையும்தான்’ என்று சொல்லிமுடிக்கும் முன்பே, இருமுவாள். மிச்சத்தை இருமிக்கொண்டே முடிப்பார். தியேட்டரில் படம் பார்க்கப் போயிருக்கும் ரஜினி, இருமல் மருந்து விளம்பரம் பார்க்க, சட்டென்று சரிதாவின் நினைவு வரும். உடனே மருந்துடன் சரிதா வீட்டுக்கு வருவார். நெகிழ்ந்து போவார் சரிதா.

விலைமகள் சரிதாவின் வீட்டின் கண்ணாடியில், மீண்டும் வருக என்று எழுதப்பட்டிருக்கும். என்ன இது என்பார். சொல்லுவார். பிறகு திருந்தியதும் அதை அழித்துவிடுவார். இருவரும் புரிந்துகொண்டு உடலால் இணையும் தருணம்… சட்டென்று எழுந்த சரிதா, ஒருநிமிஷம் என்று உள்ளேபோவார். டம்ளர் தண்ணீரை எடுப்பார். மாத்திரையை எடுப்பார். அது கரு உண்டாகாமல் இருப்பதற்கான மாத்திரை. ஒவ்வொரு இரவுகளிலும் அவள் விழுங்குகிற மாத்திரை. பழக்கதோஷத்தில் மாத்திரையைச் சாப்பிடப் போனவள், சட்டென்று உணர்ந்து, மாத்திரையைச் சாப்பிடாமல் தேவுடன் கூடுவாள் சரசு.

அந்த சரசுவின் வீடு முழுக்க, திரும்பிய இடமெல்லாம் விதம்விதமான குழந்தைப் படங்கள். ஒரு சராசரி வாழ்வுக்கு ஏங்குகிற உள்மனசின் வலியை, வசனமே இல்லாமல் நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார் கே.பி.

வீட்டுக்குள் குளித்துக்கொண்டிருக்கும் சரசு, ‘அடுப்புல பால் வைச்சிருக்கேன். பொங்கியிருக்கும். இறக்கிவைச்சிரு’ என்று அழைப்பார். தேவு பாலை இறக்கிவைத்துவிட்டு, திரும்புவார். அங்கே வெற்றுடம்புடன் குளித்துக்கொண்டிருப்பார் சரசு. வெட்கத்தில் திரும்பிக்கொள்ளும் தேவு, ‘சரசு, முதல்ல நீ வெட்கப்படக் கத்துக்கணும்’ என்பார். படம் பார்ப்பவர்களை ஒருநிமிடம் என்னவோ செய்யும் உயிர்ப்பான காட்சி அது.

’பணம் மட்டும் இருந்துருச்சுன்னா, தப்பே பண்ணாம வாழலாம். பணக்காரப் பொம்பளைங்க மாதிரி…’ என்பார் சரசு. விழுந்துவிழுந்து சிரிப்பார் தேவு. ‘ஒருத்தன் காசு கொடுத்து அடிக்கச் சொன்னான். வீடு புகுந்து அடிக்கப் போனேன். அங்கே செம அடி அவனுக்கு. ஆனா ஒருகட்டத்துல என்னை மடக்கிப் போட்டு கட்டிப்போட்டுட்டான். போலீசுக்கு போன் பண்றேன்னான். உடனே அந்தப் பொம்பள, அவனை தனியாக் கூப்பிட்ட்டா. ‘யாருக்கும் தெரியாம வந்தது அவன் மட்டுமில்ல, நீயும்தான். போலீஸு அதுன்னு போனா, ஊருக்கே தெரிஞ்சிரும்’னு சொன்னா’ என்று சரசுவிடம் சொல்ல, இருவருமே சிரிப்பார்கள்.

அதேபோல, சரசு தனக்கு நேர்ந்த அனுபவம் சொல்லுவாள். ‘ஒருத்தன் வந்தான். எல்லாம் முடிஞ்சு வெளியேபோகும் போது இன்னொருத்தன் வந்தான். ரெண்டுபேரும் பாத்துக்கிட்டாங்க. பயங்கர சண்டை. ஏன் தெரியுமா. அந்த ரெண்டுபேரும் அப்பாவும் பையனும். இதுல என்ன கூத்து தெரியுமா. இங்கே வந்ததுக்காக சண்டை இல்ல. அப்பாவை விட பையன் அஞ்சு ரூபா கூடுதலாக் கொடுத்துட்டதுக்காக சண்டை’… இப்படி படம் நெடுக, சமூகத்தின் மீது சாட்டை சுழற்றி விளாசிக்கொண்டே இருப்பார் பாலசந்தர்.

அந்த புரோக்கரின் மனைவி உடம்புமுடியாமல் படுத்திருப்பாள். கணவர் வெளியே போய்விட்டு வருவார். ஏன் லேட்டுன்னு கேட்பார். ’அந்த ராயப்பேட்டை கோமளாவுக்கு உடம்பு முடியல. அதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்’ என்பார். ‘எனக்கு உடம்பு முடியல. கூட்டிட்டுப் போகலாம்ல’ என்பார். ‘நீயும் அவளும் ஒண்ணா. அவதான் தொழிலு. மூலதனம். இது குடும்பம்’ என்பார். கல்லூரியில் படிக்கும் மகளிடம் கறாராக நடப்பார். ஆனால், அந்தப் பெண், வேறொரு புரோக்கர் மூலமாக, இந்தத் தொழிலுக்கு வந்திருப்பார். மகளைப் பார்த்து நொறுங்கிப் போய்விடுவார். மானம், கெளரவம் பெரிதென உணரும் தருணம் உலுக்கிவிடும் நம்மை! அடுத்த காட்சியில், புரோக்கர், மனைவி மகளுடன் தற்கொலை செய்துகொள்வார்.

’தொழில்’ செய்யும்போது கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசு போடுவார் சரிதா. மகாலக்ஷ்மி என்று வாயாரப் புகழ்வார்கள். திருந்திய பிறகு காசில்லை. காசு போடாதவளைப் பார்த்து மூதேவி என்பார்கள். அந்தத் தொழில் செய்யும் போது, மகாலக்ஷ்மி என்றார்கள். திருந்தி வாழும் போது மூதேவி என்கிறார்கள் என்று திரையில் வசன அட்டை வரும். இப்படி பல இடங்களில் வசன அட்டைகள் வந்து அதகளம் பண்ணும். கரவொலியை அள்ளும்.

விலைமகளின் வீட்டு வாசலில் அடிக்கப்படும் சைக்கிள் பெல், வாசலில் ‘ஜாக்கிரதை, நாய் கடிக்காது’ எனும் வாசகம், ரஜினி போடும் மூக்குப்பொடி, கிழிந்த உள்பாவாடையைக் கண்டு பதறிய ரஜினி, ஓடிச்சென்று புதுப்பாவாடை வாங்கி வரும் அன்பு, நடுவீட்டில் புல்லட்டை ஓட்டிக்கொண்டே பேசுகிற சோமன், ‘ஏய் இவளே’ என பெண்களைக் கூப்பிடுகிற ஆணாதிக்க வெறி… என்று கே.பி.டச்கள், 78ல் படம் பார்த்தவர்களை மிரட்டியெடுத்தது. உலுக்கிப் போட்டது.

ரஜினியின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம். சரிதாவுக்கு முதல் படம். இந்தக் கேரக்டரில் நடிக்க மிகப்பெரிய துணிச்சலும் திறமையும் வேண்டும். முக்கியமாக பாலசந்தர் எனும் படைப்பாளி மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். சரிதா, வாழ்ந்திருப்பார். ஆண் பெண் பேதமின்றி எல்லார் மனங்களையும் வசப்படுத்தியிருப்பார். கமல் ஒரு காட்சியில் வந்து கிச்சுகிச்சு மூட்டியிருப்பார்.

பார்த்தவர்கள் நல்ல படம் என்று சொன்னார்கள். ஆனால் படம் பார்க்க பெரும்பான்மையானவர்கள் வரவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். சமூக சோகம். கண்ணதாசனின் வரிகள், கதைக்கு ஜீவன். ’தப்புத்தாளங்கள், வழி தவறிய பாதங்கள்’, ’என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘அழகான இளமங்கை’ என்று பாடல்களெல்லாம் ஹிட். விஜயபாஸ்கரின் இசை, கதையின் கனம் உணர்த்தின. ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ என்ற பாடலை அவ்வளவு ஸ்டைலாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதிலும் ‘இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’ என்ற வரிகளை அலட்டிக்கொள்ளாமல் பாடியிருப்பார்.

1978ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளிவந்த அணுகுண்டுதான் ’தப்புத்தாளங்கள்’. வெளியாகி, 42 ஆண்டுகளாகின்றன.
இப்படியொரு படம் இனியும் வர, இன்னும் எத்தனைக் காலமாகுமோ? இப்படியொரு ‘தப்புத்தாளங்கள்’ படத்தை மிகச்சரியாகக் கொடுக்க, பாலசந்தர்தான் வரவேண்டும்!


தவறவிடாதீர்!

எஸ்.பி.பி.யின் ‘இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’; பாலசந்தரின் சரியான தாளங்கள்... ‘தப்புத்தாளங்கள்’!கே.பாலசந்தர்ரஜினிரஜினிகாந்த்கமலஹாசன்சரிதாதப்புத்தாளங்கள்கண்ணதாசன்விஜயபாஸ்கர்தப்புத்தாளங்கள் 42 ஆண்டுகள்Thapputhaalangal42 years of thappputthaalangalRajiniSarithaKamalK.balachanderAnandhuKannadasanVijayabaskar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x