Published : 01 Nov 2020 02:08 PM
Last Updated : 01 Nov 2020 02:08 PM

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: முகேஷ் கண்ணாவுக்கு சின்மயி கடும் கண்டனம்

2017-ம் ஆண்டு ஹாலிவுட்டில், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பெண் கலைஞர்கள் மீடூ என்கிற இயக்கத்தின் பெயரில் வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இந்த இயக்கம் மிகப் பெரியதாக வளர்ந்து பல நாடுகளில் பிரபலமானது. மீடூ இயக்கத்தை முன்வைத்து அந்தந்த நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே வர ஆரம்பித்தன.

இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் மீடூ இயக்கம் வளர ஆரம்பித்தது. இன்று வரை திரைத்துறையைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்து மீடூ இயக்கத்தின் உதவியோடு பேசி வருகின்றனர்.

சக்திமான் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் பற்றிப் பேசுகையில், "பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடு பிரச்சினை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்" என்கிற ரீதியில் கருத்துக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பலரும் முகேஷ் கண்ணாவை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் முகேஷ் கண்ணாவின் கருத்துக்கு பாடகி சின்மயி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி கூறியிருப்பதாவது:

பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியதால் தான் மீடு போன்ற பிரச்சினைகள் எழுவதாக முகேஷ் கண்ணா கூறியுள்ளார். ஆண்கள் தங்கள் கைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இல்லையாம். சரி அங்கிள், உண்மையை சொல்லவேண்டுமென்றால் இது போன்ற மனநிலை கொண்டவர்களால் எனக்கு சோர்வே ஏற்படுகிறது. அவர்கள் மாறப் போவதில்லை. கற்றுக் கொள்ளப் போவதுமில்லை. தங்களுடைய நச்சுக்கருத்துகளை தங்களுக்குள்ளும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. தலையெழுத்து.

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x