Last Updated : 01 Nov, 2020 12:46 PM

 

Published : 01 Nov 2020 12:46 PM
Last Updated : 01 Nov 2020 12:46 PM

சகாப்தம் படைத்த ஷான் கானரி: பால்காரர் ஜேம்ஸ் பாண்ட் ஆன கதை

ஜேம்ஸ் பாண்ட் என்றதும் நம் நினைவுக்கு வருவது என்ன? கோட் சூட், கையில் ஒரு பிஸ்டல், நடுத்தர வயதுடைய உயரமான ஒரு நபர். இதற்கான இலக்கணத்தை வகுத்தவர்தான் ஷான் கானரி. அவரது ஆஜானுபாகுவான உடற்கட்டு, கம்பீர குரல் ஆகியவற்றை ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 7 பாண்ட் படங்களின் நாயகனாக நடித்த ஷான் கானரிதான் இதுவரை நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களிலேயே பெஸ்ட் என்று பரவலாக சொல்லப்படுவதுண்டு.

1930ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ரப்பர் தொழிற்சாலையில் தினக்கூலி தொழிலாளியான ஒரு தந்தைக்கும், வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணான ஒரு தாய்க்கும் மகனாக பிறந்தார் ஷான் கானரி. குடும்ப வறுமை காரணமாக தனது ஒன்பதாவது வயதில் காலை பள்ளிக்குச் செல்லும் முன்பு வீடுகளுக்கு பால் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். ஆனால் வறுமையின் கோரப் பிடியை தாக்கு பிடியாமல் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய கானரி தனது 13வது வயதில் முழுநேர பால்காரர் ஆனார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தநேரம், இங்கிலாந்து கப்பற்படையில் சேர்ந்துகொண்டார் கானரி. 12 ஆண்டுகால ஒப்பந்தம், ஆனால் கடுமையான அல்சர் பிரச்சினையால் தனது 19வது வயதிலேயே கப்பற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் வறுமை. ஒரு சொற்ப சம்பளத்துக்காக மர சாமான்களுக்கு பாலிஷ் போடும் வேலைகளை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் சவப்பெட்டிகள் செய்யும் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கொண்டார். இடையே கால்பந்தாட்டம், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

அப்போது செய்த உடற்பயிற்சியே அவரை திரையுலகில் நுழைய வழிவகுத்து கொடுத்தது. 1953ஆம் ஆண்டு தனது நண்பர் ஒருவருடன் லண்டனின் நடைபெற்ற ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ போட்டியில் கலந்து கொண்டார். ஆறடி உயரம் கொண்ட ஷான் கானரிக்கு ‘உயரமான மனிதர்’ பிரிவில் மூன்றாம் இடம் கிடைத்தது. லண்டனில் இருக்கும்போது ‘சவுத் பசிபிக்’ என்ற இசைக் குழுவின் ஆடிஷனில் கலந்து கொண்ட கானரிக்கு கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

‘சவுத் பசிபிக்’ இசைக் குழுவுடன் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்கு ஷான் கானரி பயணம் மேற்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் ஏராளமான மேடை நாடக வாய்ப்புகள், தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் கானரிக்கு கிடைத்தன. ஆனால் 1957ஆம் ஆண்டி தான் அவரது வாழ்வில் அந்த திருப்புமுனை சம்பவம் நடந்தது. பிபிசி நிறுவனம் தயாரித்த ’ரெக்யும் ஃபார் எ ஹெவிவெய்ட்’ என்ற நேரலை நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியிருந்த ஒரு நடிகர் கடைசி நேரத்தில் நடிக்க வராமல் காலை வாரவே அந்த வாய்ப்பு ஷான் கானரியை தேடி வந்தது. அவரது உடற்கட்டுக்கு ஏற்ற பாக்ஸர் கதாபாத்திரம் அது. அடுத்த நாள் பத்திரிகைகள் கானரியை புகழ்ந்து தள்ளின.

அதே ஆண்டில் தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாத சிறிய பாத்திரங்கள். அதன்பிறகு 1959-ல் வெளியான ‘டார்ஸான்’ஸ் கிரேட்டஸ்ட் அட்வென்சர்ஸ்’ படத்தில் வில்லனாக நடித்தார். 1959ஆம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான ‘டார்பை ஓ கில் அண்ட் தி லிட்டில் பீபுள்’ படத்தில் இரண்டாம் ஹீரோ கதாபாத்திரம் கானரிக்கு கிடைத்தது.

வாழ்க்கை இப்படியாக போய்க் கொண்டிருந்த வேளையில்1961ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரினீனா’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு தொலைகாட்சி திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கானரியை தேடி வந்தது. அதற்காகவே அத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்ததை போல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார் ஷான் கானரி.

இதற்கிடையே 1958ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் எழுத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு நாவலை அதே பெயரில் படமாக்க முயன்று கொண்டிருந்த ஹாரி சால்ட்ஸ்மேன் மற்றும் ஆல்பர்ட் ஆர். ப்ரோக்கோலி என்ற இருவரின் கவனமும் ஷான் கானரியின் பக்கம் திரும்பியது.

அந்த நாவலின் நாயகனான துப்பறிவாளன் கதாபாத்திரத்துக்காக தாங்கள் தேடிக் கொண்டிருந்த ஒருவர் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியில் இருவரும் துள்ளிக் குதித்தனர் . இப்படியாக ‘ஜேம்ஸ் பாண்ட்’ ஆக மாறத் தயாரானார் கானரி. ஸ்க்ரீன் டெஸ்ட் எதுவும் இல்லாமலேயே முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ படத்தில் நடிக்க ஷான் கானரி தயாரிப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் மூலகர்த்தாவான இயன் ஃப்ளெமிங்க்கு ஷான் கானரியின் தேர்வு திருப்தியளிக்கவில்லை. ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘ஜேம்ஸ் பாண்டாக நான் எதிர்பார்த்தவர் இவரல்ல. நான் ஒரு கமாண்டரை எதிர்பார்த்தேன். அதிகம் வளர்ந்த ஒரு ஸ்டண்ட்மேனை அல்ல’.

ஒருவழியாக 1962ஆம் ஆண்டு ‘டாக்டர் நோ’ திரைப்படம் வெளியானது. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அதுவரையில் எழுத்தின் வாயிலாக கற்பனை செய்திருந்த ரசிகர்கள் ஷான் கானரியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று தீர்க்கமாக நம்பிய இயன் ஃப்ளெமிங்குக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வசூல மழையை பொழிந்தது ‘டாக்டர் நோ’. படத்தில் ஷான் கானரி உச்சரிக்கும் ‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’ வசனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுவே இன்று 007-ஆக நடிக்கும் டேனியல் க்ரெய்க் வரை ஒரு அடையாளமாக மாறிப் போனது.

‘டாக்டர் நோ’ படத்தை விமர்சித்த பத்திரிகைகள் ஷான் கானரியை பற்றி குறிப்பிடும்போது ‘இவர் ஆஸ்கர் வாங்குவாரா என்று தெரியாது. ஆனால் கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ச நாயகனாவார்’ என்று புகழ்ந்தன.

அடர்ந்த புருவங்களும், நெடுநெடு உயரமும், ஷான் கானரியை ஜேம்ஸ் பாண்டாகவே ரசிகர்களை நினைக்க வைத்தது. அவர்கள் புத்தகத்தில் படித்த அந்த கதாபாத்திரத்துக்கு திரையில் உயிரூட்டியிருந்தார் கானரி.

‘டாக்டர் நோ’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ் ’(1963), ‘கோல்டுஃபிங்கர்’ (1964), ‘தண்டர்பால்’ (1965), ‘யு ஒன்லி லிவ் ட்வைஸ்’ (1967) ஆகிய ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகனாக நடித்தார்.

ஜேம்ஸ் பாண்டாக ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டாலும், இதுவே தனது அடையாளமாக மாறிவிடக்கூடாது என்று எண்ணிய ஷான் கானரி ‘யு ஒன்லி லிவ் ட்வைஸ்’ படத்துக்கு பிறகு இனி ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். இதனால் அடுத்து 1969ஆம் ஆண்டு வெளியான ‘ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரெட் சர்வீஸ்’ படத்தில் ஜார்ஜ் லேஸன்பை என்ற ஆஸ்திரேலிய நடிகரை தயாரிப்பாளர்கள் நடிக்க வைத்தனர்.

படம் வெற்றி பெற்றாலும் புதிதாக ஜேம்ஸ்பாண்டாக நடித்த நடிகர் ரசிகரகள் மத்தியில் ஜேம்ஸ் பாண்டாக எடுபடவில்லை. இதனால் தயாரிப்பாளர்களின் பெரும் வற்புறுத்தலின் பேரில் ‘டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர்’ (1971) திரைப்படத்தில் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக களமிறங்கினார் ஷான் கானரி. அதன் பின்னர் 1973ஆம் ஆண்டு வெளியான ‘லிவ் அண்ட் லெட் லிவ்’ என்ற பாண்ட் படத்தில் அறிமுகமான ரோஜர் மூர் அடுத்த 12 ஆண்டுகாலம் ஜேம்ஸ் பாண்டாக கோலோச்சினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1983ஆம் ஆண்டு மீண்டும் ‘நெவர் சே நெவர் அகைன்’ (1983) படத்தில் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார் ஷான் கானரி. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தால் உலக உளவில் புகழ்பெற்றிருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை மிகவும் வெறுத்தார். ஒரு பேட்டியில் “பாண்ட் கதாபாத்திரத்தால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். நான் எப்போதும் ஜேம்ஸ் பாண்டை வெறுக்கிறேன். அவனை சுட்டுக் கொல்லவே விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஜேம்ஸ் பாண்ட் என்ற ஒரு வட்டத்தினுள் மட்டும் தன்னை அடைத்துக் கொள்ளாமல் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட பல்வேறு திரைப்படங்களிலும் ஆரம்பம் முதல் ஷான் கானரி கவனம் செலுத்தி வந்தார். ஹிட்ச்காக்கின் ‘மார்னி’(1964), தி அஃபன்ஸ் (1972), மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்ப்ரஸ் (1974) ஆகிய படங்கள் கானரிக்குள் இருந்த அற்புதமான நடிகனை வெளிகொணர்ந்தன.

70- களின் இறுதி முதல் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு வெளியான ‘விண்ட் அண்ட் தி லயன்’ மற்றும் 1976ஆம் ஆண்டு வெளியான ராபின் அண்ட் மேரியன் ஆகிய படங்கள் அவர் மீதிருந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் என்று பிம்பத்தை மாற்றியமைத்தன.

லண்டன் பத்திரிகைகளின் வாக்கை பொய்யாகும் வகையில் 1986ஆம் ஆண்டு வெளியான ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’ மற்றும் 1987ஆம் ஆண்டு வெளியான ‘தி அன்டச்சபிள்ஸ்’ ஆகிய படங்கள் கானரிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தன.

வெறும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ஷான் கானரி. 1989ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ்: தி லாஸ்ட் க்ருஸேட்’ தன்னை விட 10 வயதே இளையவரான ஹாரிஸன் ஃபோர்டுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

2000ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசெபத்தால் ஹோலிரூட் அரண்மைனையில் கவுரவிக்கப்பட்டார் கானரி.

இறுதியாக 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஃப்ரீடம்: எ ஹிஸ்டரி ஆஃப் யுஎஸ்’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த படத்திலும் கானரி நடிக்கவில்லை. திரையுலகிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் ‘ஹாலிவுட்டில் முட்டாள்கள் படமெடுக்க தொடங்கி விட்டனர். இனிமேல் நான் நடிப்பேன் என்று எனக்கு தோன்றவில்லை. எனக்கு ஏராளமான அழகிய நினைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த நாட்களெல்லாம் முடிந்து போய் விட்டன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்தைகய அழகான நினைவுகளை ரசிகர்களுக்கு உருவாக்கித் தந்த ஷான் கானரி தனது 90வது வயதில் நேற்று மறைந்துவிட்டார். ஹாலிவுட் உலகமும், ரசிகர்களும் தங்கள் சோகங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

ஷான் கானரி உருவாக்கிய ஜேம்ஸ் பாண்டுக்கான இலக்கணத்தை இப்போது வரை யாராலும் உடைக்க முடியவில்லை. இனிமேல் வரப்போகிறவர்களாலும் அதை உடைக்க முடியுமா என்பது சந்தேகமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x