Published : 01 Nov 2020 12:27 pm

Updated : 01 Nov 2020 12:27 pm

 

Published : 01 Nov 2020 12:27 PM
Last Updated : 01 Nov 2020 12:27 PM

‘தாழையாம்பூ முடிச்சு’, ‘ஏன் பிறந்தாய் மகனே’, ‘டேய் சிங்கப்பூரான்..’ சிவாஜி, ஏ.பீம்சிங், ‘பா’வரிசைப் படங்கள், ‘பாகப்பிரிவினை’

61-years-of-bagappirivinai

தமிழ் சினிமாவில் சிவாஜி படங்களுக்குத் தனியிடம் உண்டு. அவற்றில் சிவாஜி - இயக்குநர் ஏ.பீம்சிங் கூட்டணியில் அமைந்த படங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் குறிப்பாக, இவர்களின் கூட்டணியில் அமைந்த ‘பா’ வரிசைப் படங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். அப்படி கொடுக்கும் வகையில் அமைந்த ‘பா’ வரிசைப்படங்களை மறக்கவே முடியாது.

‘பாசமலர்’, ‘பாலும்பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’ என பல படங்களை இன்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பார்த்து வியந்துகொண்டே இருக்கிறோம். வியந்து போற்றிக்கொண்டே இருக்கிறோம். அந்த வகையில், சிவாஜி, ஏ.பீம்சிங் கூட்டணியில் மிகப் பெரிய வெற்றியைத் தந்த படம் ‘பாகப்பிரிவினை’.

’பாகப்பிரிவினை’ படம் வெளியான அந்த வருடத்தில், ‘அவள் யார்?’ என்றொரு படத்தில் நடித்தார் சிவாஜி. இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியாது. அடுத்து, பத்மினியுடன் ‘தங்கப்பதுமை’ என்ற படத்தில் நடித்தார். படமும் பாடல்களும் பற்றிக் கொண்டன. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அதையடுத்து, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ காலத்துக்கும் மறக்க முடியாத படமாக அமைந்தது. . இந்தப் படத்தின் வெற்றியை சாதாரணமாகச் சொல்லமுடியாது. மிரள வைத்த சிவாஜியின் நடிப்பும் கர்ஜிக்கும் அவரின் குரலும் நடையும் சிலிர்க்க வைத்தது நம்மை! வெளிநாடுகளில் கூட ‘கட்டபொம்மன்’ சிவாஜி, தன் நடிப்பாட்சியை, ஆளுமையைச் செலுத்தி, பாராட்டுகளைப் பெற்றார்.

இதே வருடத்தில், ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.பீம்சிங் இயக்கத்தில், சிவாஜிகணேசனின் நடிப்பில் உருவானது ‘பாகப்பிரிவினை’.
சிவாஜிகணேசன், சரோஜாதேவி, பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.

சிறுவயதில், கன்னையாவிற்கு, மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும். பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார். பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியம்மாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதா என அடுத்தகட்டம்தான் வாழ்க்கைப் பாடம். படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது. சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள். அதேபோல் டி.எஸ்.பாலையாவும் எஸ்.வி.சுப்பையாவும் சகோதரப் பாசத்தை கண்முன்னே காட்டி, கலங்கடித்திருப்பார்கள்.

படத்தின் வெற்றியில் சரோஜாதேவிக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த ஸ்ரீதரின் ‘கல்யாணபரிசு’ பிரமாண்ட வெற்றியை அடைந்திருந்தது. செப்டம்பர் மாதத்திலும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. அக்டோபர் மாதமும் ’கல்யாண பரிசு’ பார்க்க, கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது. சரோஜாதேவி நடித்த படம் என்று கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். அதேபோல், சரோஜாதேவிக்கு இந்தப் படம் இன்னும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த இரண்டு படங்களிலும் சரோஜாதேவியின் ஆகச்சிறந்த நடிப்பைக் காணலாம்.

’பாகப்பிரிவினை’ படத்துக்கு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள். அற்புதமான இசையையும் பாடல்களையும் வழங்கியிருந்தார்கள். எம்.எஸ்.சோலைமலை கதை, வசனத்தை எழுதியிருந்தார். இயல்பான கதை, அழுத்தமான, பாந்தமான வசனங்கள். அப்பாவித்தனமாக, ஒரு கை செயலிழந்த நிலையில், இயலாமையுடன் சிவாஜி பேசுகிற வசனங்கள் எல்லாமே நம்மை என்னவோ செய்யும்.

படத்துக்கு பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். அப்போது அந்த சமயத்தில் சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் என்பார்கள். சிவாஜி படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதவில்லை என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் பீம்சிங்கிடம், ‘கதையில் இந்த இடத்தில் வருகிற பாடலை கவிஞரைத் தவிர (கண்ணதாசன்) யாருமே எழுதமுடியாது’ என்று சொல்ல... ஒருவழியாக, சமரசமானார்கள் சிவாஜியும் கண்ணதாசனும். அப்படி பட்டுகோட்டை கல்யாணசுந்தரமே கண்ணதாசன் எழுதினாத்தான் சரியாக இருக்கும் என்று சொன்ன அந்தப் பாடல் ... ‘ஏன் பிறந்தாய் மகனே...’ பாடல்.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘பிள்ளையாரு கோயிலுக்கு’ என்றொரு பாடல். ‘தேரோடும் எங்க சீரான மதுரையில’ என்றொரு பாடல். ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து...’ என்றொரு பாடல், ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே...’, என்றொரு பாடல். ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ என்ற பாடல். ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...’ என்று அனைத்துப் பாடல்களுமே நம் மனதில் இன்றைக்கும் உறவாடிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல்லில் செம கலெக்‌ஷனை அள்ளியது ‘பாகப்பிரிவினை’. சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’. அந்த வருடத்தின் சிறந்த மூன்று படங்களில் ஒரு படமாக ‘பாகப்பிரிவினை’ படம், இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது.

1959ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியானது ‘பாகப்பிரிவினை’. படம் வெளியாகி, இன்றுடன் 61 ஆண்டுகளாகின்றன. சிவாஜி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மெல்லிசை மன்னர்கள், ஏ.பீம்சிங் கூட்டணியில் உருவான ‘பாகப்பிரிவினை’ படத்தையும் தமிழ் சினிமா ரசிக உள்ளங்களையும் எவராலும் பிரிக்கவே முடியாது. யாராலும் மறக்கவே முடியாது.

தவறவிடாதீர்!

‘தாழையாம்பூ முடிச்சு’‘ஏன் பிறந்தாய் மகனே’‘டேய் சிங்கப்பூரான்..’ சிவாஜிஏ.பீம்சிங்‘பா’வரிசைப் படங்கள்‘பாகப்பிரிவினை’பாகப்பிரிவினைபாகப்பிரிவினை 61 ஆண்டுகள்சிவாஜிஎம்.ஆர்.ராதாசரோஜாதேவிசிவாஜி பீம்சிங்கின் ‘பா’ வரிசைப் படங்கள்மெல்லிசை மன்னர்கள்கண்ணதாசன்பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்SivajiSarojadeviA.bhimsingh61 years of bagappirivinai

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x