Published : 31 Oct 2020 06:42 PM
Last Updated : 31 Oct 2020 06:42 PM

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஷான் கானரி காலமானார். அவருக்கு வயது 90.

ஸ்காட்லாந்தில், எடின்பர்க்கின் குடிசைப் பகுத்களில் பிறந்தவர் தாமஸ் ஷான் கானரி. கடும் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. தினக்கூலி முதல் ராணுவம் வரை பல்வேறு தளங்களில் பணியாற்றிய ஷான் கானரி 1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

அவரது 23வது வயதில் லண்டனில் ஒரு நாடகக் குழுவில் உதவியாளராக இருந்த போது, அவர்களது நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வு இருப்பதை அறிந்து அதில் நடிக்க முயற்சி செய்தார். அவருக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தது. அடுத்தடுத்த வருடங்களில் அதே நாடகங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் கானரி நடித்தார். தீவிரமாக நாடகத்தில் ஈடுபட்டு வந்த கானரிக்கு திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக இருக்கும் கதாபாத்திரங்களாக மட்டுமே வாய்ப்புகள் வந்தன.

சின்னத்திரையிலும் சில நாடகங்களில் கானரி நடித்து வந்தார். 1957ஆம் ஆண்டு, 'நோ ரோட் பேக்' என்கிற திரைப்படத்தில் ஷான் கானரிக்கு முதல் முழு நீள கதாபாத்திர வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில வாய்ப்புகள் வந்தாலும் 1962ஆம் ஆண்டு, 'டாக்டர் நோ' திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்ததுதான் கானரியை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்கிற பெருமையும் கானரியைச் சேரும். கானரி நடித்த 7 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஆனால் தன்னை ஜேம்ஸ் பாண்ட் நடிகராக மட்டுமே மக்கள் அடையாளப்படுத்துவதை கானரி விரும்பவில்லை என்று அவரது நண்பரும், மற்றொரு மூத்த ஆங்கில நடிகருமான மைக்கேல் கெய்ன் கூறியுள்ளார். இன்னும் பல்வேறு வெற்றிப் படங்களில் கானரி நடித்திருந்தாலும் இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் தான் அவரது அடையாளமாக இருந்து வருகிறது.

'தி அண்டச்சபிள்ஸ்' என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கானரி வென்றார். மேலும் 2 பாஃப்தா விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். 40 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் கானரிக்கு, 'இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், 'தி ஹண்ட் ஃபார் தி ரெட்' அக்டோபர், 'தி ராக்' உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழைத் தேடித் தந்தன.

'மேட்ரிக்ஸ்','லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க கானரிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தப் படங்களின் கதை தனக்குப் புரியவில்லை என்று காரணம் கூறி அந்த வாய்ப்புகளை கானரி மறுத்துள்ளார். ஜூன் 2007ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக கானரி அறிவித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் கானரி தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

1962ல் நடிகை டயான் சிலெண்டோவை கானரி மணந்தார். இவர்களுக்கு ஜேஸன் கானரி என்கிற மகன் உள்லார். சிலெண்டாவை 73ஆம் வருடம் கானரி விவாகரத்து செய்தார். 1975ஆம் ஆண்டு மிஷலின் ரோக்ப்ரூன் என்கிற ஓவியரை கானரி மணந்தார். கடைசி வரை மிஷலினுடன் தான் கானரி இருந்து வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x