Published : 31 Oct 2020 03:42 PM
Last Updated : 31 Oct 2020 03:42 PM

'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் சாய் பல்லவி

ஹைதராபாத்

தெலுங்கில் உருவாகவுள்ள 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ராணாவுக்குப் பதில் நிதின் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், அய்யப்பன் மனைவி கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. மலையாளத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் கவுரி நந்தா நடித்திருந்தார். தெலுங்கில் இந்தக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். அதாவது பவன் கல்யாணின் மனைவியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு படப்பிடிப்புத் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கினை சாகர் கே.சந்திரா இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரசாத் முரேலா, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x