தொழிலதிபருடன் காஜல் அகர்வால் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

தொழிலதிபருடன் காஜல் அகர்வால் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

Published on

மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்லுவுடன் காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்யவுள்ளதைக் காஜல் அகர்வால் உறுதி செய்தார். அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்தார்.

கரோனா அச்சுறுத்தலால் நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாயின.

காஜல் அகர்வாலுடன் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்குத் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

திருமணம் முடிந்தாலும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in