

2008ஆம் ஆண்டு ‘அயர்ன்மேன்’ படத்துடன் தொடங்கிய மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22-வது படமாக கடந்த ஆண்டு உலகமெங்கும் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. அதற்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 3 ஆம் பாகம் முடிவுக்கு வந்தது.
தற்போது படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 4 ஆம் பாகத்துக்கான சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தபோது கரோனா அச்சுறுத்தலால் அவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இந்த சூழலில் மார்வெல் நிறுவனம் பெண் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வந்தது. காமிக்ஸில் ஏராளமான பெண் சூப்பர்ஹீரோக்கள் இருந்தும் அவற்றுக்காக ஒரு படம் கூட உருவாக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படம் வெளியானது. பெண் சூப்பர்ஹீரோவான கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்துக்கென் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘ப்ளாக் விடோ’-வும் பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம்தான்.
இந்த சூழலில் முழுக்க முழுக்க பெண் சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைத்து அவெஞ்சர்ஸ் படம் ஒன்றை உருவாக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக ‘ப்ளாக் பேந்தர்’ படத்தில் நடித்த நடிகை லிட்டிஷா ரைட் தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
பெண் சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைக்க நாங்கள் போராட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் தயாரிப்பாளர் விக்டோரியா அலோன்சோ மற்றும் மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் அதற்கான திட்டங்களில் உறுதியாக இருக்கின்றனர்.
இவ்வாறு லிட்டிஷா கூறியுள்ளார்.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் பெண் சூப்பர்ஹீரோக்கள் ஒன்றிணைந்து சண்டையிடுவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் பெண் சூப்பர்ஹீரோக்களுக்கென தனி அவெஞ்சர்ஸ் படத்தை உருவாக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.